இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு ஜெய்ப்பூரில் துவங்க உள்ளது. இந்த தொடரில் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஓய்வு காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் யார் இறங்குவார்கள் ? என்று எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலியின் மூன்றாம் இடத்தில் இந்த தொடரில் களமிறங்க வாய்ப்பு உள்ள மூன்று வீரர்களை நாங்கள் இங்கே உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஷ்ரேயாஸ் ஐயர் : இந்திய அணியின் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிட்டார். பின்னர் இரண்டாம் பாதியில் அவர் அணிக்கு திரும்பினாலும் உலக கோப்பை அணிக்கு ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வாகி இருந்தார். இதன் காரணமாக தற்போது மீண்டும் அவர் இந்த நியூசிலாந்து தொடரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளதால் அவர் விராத் கோலியின் இடத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷன் : சமீபத்தில் இந்திய அணியில் அறிமுகமாகி விளையாடி வரும் இஷான் கிஷன் நிரந்தர இடமின்றி தவித்து வருகிறார். அது மட்டுமின்றி அவருடைய இடம் மாற்றி மாற்றி களமிறக்கபடுவதால் அவரால் சரியான நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மூன்றாம் இடத்திலாவது அவருக்கான வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இவரும் விராட் கோலியின் இடத்துக்கு மாற்று வீரராக பார்க்கப்படுகிறார்.

ருதுராஜ் கெய்க்வாட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க வீரராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே அவருக்கு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்த கெய்க்வாட் இம்முறை மூன்றாவது இடத்தில் இறங்குவதற்கான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.