இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அணியின் தொடக்க வீரர்களான பிர்த்திவி ஷா மற்றும் மயங்க் அகர்வால் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இதன் பின் களமிறங்கிய விராட் கோலி 74, புஜாரா 43, ரஹானே 42 ரன்கள் குவிக்க இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தது. இதன் பின் களமிறங்திய ஆஸ்திரேலிய அணியும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பெய்ன் 73 ரன்களை குவித்தார்.
இதனைத் தொடர்ந்து. இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தனர். அதிகபட்சமாக புஜாராவின் 9 ரன்கள் தான் இருக்கிறது. இதனால், ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில், இந்திய அணியின் இந்த படுமோசமான தோல்வியை கண்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய டாம் மூடி “இந்திய அணி தோற்கவில்லை, இந்திய அணி தேர்வாளர்கள் தான் தோற்று விட்டார்கள். சிறந்த நிலையில் இல்லாத பிரித்வி ஷாவை அணியில் சேர்த்தது மாபெரும் தவறு. பிரித்வி ஷாவின் பேட்டிங்கில் பிரச்சனை இருக்கிறது.
இவர் டெஸ்ட் போட்டிக்கு சரி வர மாட்டார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இவரை ஆடும் லெவனில் எடுத்தது இந்திய அணியின் மிகப்பெரிய தவறு. இந்நிலையில் சிறந்த பேட்டிங்கில் இருக்கும் சுப்மன் கில் தொடக்க வீரராக தேர்ந்தெடுத்து இருந்தால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புகள் இருந்திருக்கும்” என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கூறியுள்ளார்.