தமிழ்நாட்டில் புஜ்ஜி பாபு 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழ்நாடு வாரிய லெவன் மற்றும் மும்பை அணிகள் மோதிய போட்டி துவங்கியது. கோயம்புத்தூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் தமிழ்நாடு லெவன் அணி 379 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக தமிழக வீரர் பூபதி குமார் 82 ரன்கள் குவித்தார்.
மும்பை அணிக்கு அதிகபட்சமாக ஹிமான்சு சிங் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே தமிழக பவுலர்களின் சுமாரான பந்து வீச்சில் திணறலாக விளையாடி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக திவ்யான்ஸ் சக்சேனா 70 ரன்கள் எடுத்தார்.
தமிழகம் வெற்றி:
தமிழ்நாடு லெவன் அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர் வெறும் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து மும்பையை சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றினார். அதன் பின் 226 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தமிழ்நாடு இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லோகேஸ்வர் 73 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மும்பை சார்பில் அதிகபட்சமாக தனுஷ் கோடியான் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 510 என்ற மெகா இலக்கை துரத்திய மும்பை அணிக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் முசீர் கான் 40 மற்றும் திவ்யான்ஸ் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். ஆனால் அதைத்தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
சூர்யாகுமார் காயம்:
அதே போல மிடில் அடரில் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் காயமடைந்து பரிதாபமாக வெளியேறினார். இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக இத்தொடரில் விளையாடுவதாக தெரிவித்த அவர் முதல் போட்டியிலேயே காயமடைந்து அரை சதம் கூட அடிக்காமல் சோகமாக வெளியேறினார். இறுதியில் சம்ஸ் முலானி 68 ரன்கள் எடுத்தும் மும்பையை 223 ரன்களுக்கு தமிழ்நாடு லெவன் அணி சுருட்டியது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியா மாதிரி சூழ்நிலைகளில் பும்ராவை விட அவர் டேஞ்சரான பவுலர்.. பரத் அருண் பேட்டி
அதனால் 286 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற தமிழ்நாடு வாரிய லெவன் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. தமிழக அணிக்கு மொத்தமாக 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய சாய் கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அந்த வகையில் வலுவான மும்பையை சொந்த மண்ணில் தமிழ்நாடு அணி தோற்கடித்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.



