இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 – 25 சீசன் நடைபெற்று வருகிறது. அதில் தமிழ்நாடு அணி தங்களுடைய முதல் போட்டியில் சௌராஷ்ட்ராவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து டெல்லியை தங்களுடைய இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு எதிர்கொண்டது. அப்போட்டி அக்டோபர் 14ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது.
அதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு பேட்ஸ்மேன்கள் டெல்லி போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் தமிழ்நாடு தங்களுடைய முதல் இன்னிங்ஸை 674-6 ரன்கள் குவித்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
தமிழ்நாடு அசத்தல்:
அதிகபட்சமாக துவக்க வீரர் சாய் கிஷோர் இரட்டை சதமடித்து 25 பவுண்டரி 1 சிக்ஸருடன் 213 ரன்கள் குவித்தார். அவருடன் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பங்கிற்கு சதமடித்து 152 ரன்களும் ரஞ்சன் பிரதோஷ்பால் சதமடித்து 117 ரன்களும் ஆண்ட்ரே சித்தார்த் 66* ரன்களும் குவித்தனர். டெல்லிக்கு அதிகபட்சமாக நௌதீப் சைனி ஹிமான்சு சவ்கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி தமிழ்நாடு பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக யாஷ் துள் சதமடித்து 105* ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, முகமது, குர்ஜப்நீத் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 408 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழ்நாடு மீண்டும் பேட்டிங் செய்யுமாறு டெல்லிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது.
2 விக்கெட்டில் மிஸ்:
அதன் பின் பேட்டிங் செய்த டெல்லி மீண்டும் தடுமாற்றமாக விளையாடி 4வது நாள் முடிவில் 193-8 ரன்கள் எடுத்தது. அப்போது நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. டெல்லிக்கு அதிகபட்சமாக சனத் சங்வான் 83 ரன்கள் எடுத்த நிலையில் தமிழகத்துக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, அஜித் ராம் 2, சோனு யாதவ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – காகிசோ ரபாடா
அந்த வகையில் கடினமாக போராடியும் 2 விக்கெட்டுகளை எடுக்காததால் இப்போட்டியில் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றியுடன் 7 புள்ளிகளை தவற விட்டது. இருப்பினும் தமிழ்நாடு அணி 408 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது. அதன் காரணமாக தமிழ்நாடு அணி 3 புள்ளிகளை பெற்று எலைட் குரூப் ஏ பிரிவில் மொத்தம் 10 புள்ளிகளுடன் +3.184 என்ற மற்ற அணிகளை காட்டிலும் அதிக ரன்ரேட்டுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்டுகள் மற்றும் 153 ரன்கள் எடுத்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.



