சயீத் முஸ்டாக் அலி 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் நவம்பர் 27ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பரோடா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்த களம் இறங்கிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர்கள் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி 25 (14), நாராயண் ஜெகதீசன் 57 (32) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள்.
அதே போல மிடில் ஆர்டரில் பூபதி குமார் 28 (16), கேப்டன் சாருக்கான் 39 (25) ரன்கள் விளாசி அசத்தினார்கள். மேலும் விஜய் சங்கர் 4 சிக்ஸருடன் 42* (22) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய 17 வது ஓவரின் முதல் பந்தில் அதிரடியான சிக்சரை அடித்த அவர் இரண்டாவது பந்திலும் சிக்ஸர் பறக்க விட்டார்.
தமிழ்நாடு அசத்தல்:
பின்னர் சிங்கள் எடுத்த அவர் கடைசி பந்தில் நேராக சிக்ஸர் அடித்து பாண்டியாவுக்கு எதிராக ஒரே ஓவரில் 19 ரன்கள் குவித்தார். அவருடன் முகமது 15 (6), ரித்திக் ஈஸ்வரன் 10 (5) ரன்கள் எடுத்த உதவியுடன் தமிழ்நாடு 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 221-6 ரன்கள் குவித்தது. பரோடா அணிக்கு மெரிவாலா 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார்.
அடுத்ததாக 222 ரன்களை துரத்திய பரோடா அணிக்கு நித்தேஷ் பட்டேல் 18 (11), அஸ்வின் குமார் 29 (19), சிவாலிக் சர்மா 14 (10) ரன்கள் எடுத்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் க்ருனால் பாண்டியா 22 (20) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் பானு பானியா அதிரடியாக விளையாடி 42 (20) ரன்கள் குவித்தார்.
பாண்டியா அபாரம்:
அவருடன் சேர்ந்து விளையாடி நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா இரு மடங்கு அதிரடியாக விளையாடி தமிழக பவுலர்களை வெளுத்து வாங்கினார். அந்த வகையில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 69 (30) ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். குறிப்பாக குர்ஜப்நீத் வீசிய 18வது ஓவரில் மட்டும் 6, 6, 6,நோபால் 6, 4, 1 என அதிரடியாக விளையாடிய அவர் 30 ரன்கள் விளாசினார்.
இதையும் படிங்க: இந்தியாவே வேணாம்னு கனடாவிற்கு போக இருந்த எனக்கு வாழக்கை கொடுத்ததே மும்பை இந்தியன்ஸ் தான் – இளம்வீரர் பூரிப்பு
அவருடைய ஆட்டத்தை வீணடிக்காமல் ராஜ் லிம்பானி 4*, அடிட் சேத் 7* (3) ரன்கள் அடித்து தேவையான ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் 222-7 ரன்கள் எடுத்த பரோடா 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இந்த வகையில் பரோடா அணி கடைசி பந்தில் போராடி வென்றது. அதனால் தமிழக அணிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3 சாய் கிஷோர், 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.



