என்ன ஆனாலும் அவங்களுக்கு முழு சப்போர்ட் செய்வோம் – விமர்சனத்தில் தவிக்கும் 2 வீரர்களுக்கு ரோஹித் ஆதரவு

Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த போட்டிகளில் கொதித்தெழுந்த இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று தங்களை நம்பர் ஒன் டி20 அணி என நிரூபித்துள்ளது. முன்னதாக கடந்த ஒரு வருடமாக முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்ட இந்தியா சமீபத்தில் 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற ஆசிய கோப்பையில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

Rohit Sharma Bhuvneswar Kumar

- Advertisement -

தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளால் தோல்வியை சந்தித்த அந்த தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வென்றாலும் டெத் பவுலிங் இன்னும் முன்னேறாமலேயே உள்ளது. குறிப்பாக ஆசிய கோப்பையில் 19வது ஓவரில் ரன்களை வாரி வழங்கி விமர்சனத்திற்கு உள்ளான சீனியர் புவனேஸ்வர் குமார் இந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலும் 19வது ஓவரில் 18 ரன்கள் கொடுத்து வெற்றியை தாரை வார்த்தார். அதனால் 2வது போட்டியில் நீக்கப்பட்ட அவர் 3வது போட்டியில் மீண்டும் 3 ஓவரில் 39 ரன்களை வாரி வழங்கி கொஞ்சமும் முன்னேறவில்லை என்பதைக் காட்டினார்.

சப்போர்ட் பண்ணுவோம்:
சரி அவர்தான் அப்படி என்று பார்த்தால் காயத்தால் பங்கேற்காததால் ஆசிய கோப்பையில் தோற்றோம் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த ஹர்ஷல் படேல் குணமடைந்து இத்தொடரில் களமிறங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே 18வது ஓவரில் 22 ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டார். அதே போல் எஞ்சிய 2 போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கிய அவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்களை கொடுத்த பவுலர் என்ற மோசமான உலக சாதனையும் படைத்துள்ளார்.

harshal

இப்படி ரன்களை வாரி வழங்கும் இவர்கள் உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்தியா நிச்சயம் வெல்லப்போவதில்லை என்று கவலையை தெரிவிக்கும் ரசிகர்கள் ஷமி, சஹர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் நல்ல அனுபவமும் திறமையும் கொண்டுள்ள அவர்களுக்கு இந்த மோசமான தருணத்தில் முழுமையான ஆதரவளிப்போம் என்று தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா ஹைதராபாத் போட்டிக்குப் பின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“புவனேஸ்வர் போன்றவருக்கு தேவையான இடைவெளி வழங்குவது அவசியமாகும். ஏனெனில் அவரைப் போன்ற தரமான ஒருவர் கடந்த பல வருடங்களில் மோசமாக செயல்பட்ட நாட்களை விட சிறப்பாக செயல்பட்ட நாட்களே அதிகம். மேலும் அவருக்காக சில திட்டங்களை நாங்கள் தீட்டி வருவதால் டெத் ஓவர்களில் சிறந்து விளங்கும் வகையில் அவருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம். அதனால் அவர் முன்பை போல் சிறப்பாக செயல்படுவார். மேலும் இதனால் அவருடைய தன்னம்பிக்கை குறைந்ததாகவும் நான் பார்க்கவில்லை. எனவே அவருடைய திறமை மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

Rohit-Sharma

அதேபோல் ஹர்ஷல் படேல் எங்களின் முக்கியமான வீரர் என்பதில் சந்தேகமில்லை. காயத்திலிருந்து திரும்பியுள்ள அவர் சுமார் 2 மாதங்கள் விளையாடாத காரணத்தால் சிறப்பாக செயல்படுவது எளிதானதல்ல. எனவே இந்த 3 போட்டிகளில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து அவரை நாங்கள் மதிப்பிடவில்லை. ஏனெனில் அவர் தரமானவர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் கடந்த காலங்களில் எங்களுக்கும் ஐபிஎல் தொடரிலும் கடினமான ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். அதனால் அவர் மீதும் நம்பிக்கை வைப்பது எங்களுக்கு முக்கியம். மேலும் அவரும் தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் நேரம் அவருக்கு வெகு தொலைவில் இல்லை” என்று கூறினார்.

அதாவது அந்த 2 பவுலர்களும் திறமையும் தரமும் கொண்டிருப்பதால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து விரைவில் நடைபெறும் தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா தற்சமயத்தில் தடுமாறுவதற்காக அவர்களை உலகக் கோப்பையிலிருந்து அதிரடியாக நீக்க முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement