
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்க உள்ளது. மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடரில் உலகின் டாப் 8 அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதில் இந்திய அணி தங்களுடையப் போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது.
இந்திய அணி இம்முறை தங்களுடைய குரூப் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. அதில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து அந்த அணி வெளியேற்றியதை ரசிகர்களால் மறக்க முடியாது.
அதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியாவை தோற்கடித்த வல்லமை நியூசிலாந்துக்கு இருக்கிறது. அது மட்டுமின்றி 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து கோப்பை தட்டிச் சென்றது. இவை அனைத்திற்கும் முன்பாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் (நாக் அவுட் கோப்பை) இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்த நியூசிலாந்து கோப்பையை முத்தமிட்டது.
இந்நிலையில் ஐசிசி தொடர்களில் எப்போதும் வலுவான இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். அதற்கு நிகரான திறமையும் பலத்தையும் கொண்ட தங்களுடைய நியூசிலாந்து 2000ஆம் ஆண்டு போல இம்முறையும் இந்தியாவை ஃபைனலில் எதிர்கொண்டு வெல்வதை விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“உலகத் தொடர்கள் என்று வரும் போது இந்தியா வலுவான அணி. அவர்கள் எப்போதும் நாக் அவுட் சுற்றை நெருங்கி விடுவார்கள். எனவே அவர்கள் தொடர் முழுவதுமே ஆபத்தான அணியாக இருப்பார்கள். அதே போல நியூசிலாந்து அணியும் இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களைப் போல நியூசிலாந்தும் ஃபைனல் செல்லும் என்று நம்புகிறேன். 8 அணிகள் பங்கேற்கும் இது மிகவும் சிறந்த தொடர்”
இதையும் படிங்க: காயத்துக்கு இதான் காரணம்.. இது டென்னில், ஃகோல்ப் இல்ல.. பும்ரா இல்லனாலும் இந்தியா ஜெய்க்கும்.. கபில் தேவ்
“அது மிகவும் சிறிய கூர்மையான போட்டி மிகுந்த தொடர். நானும் அதில் எனது கேரியரில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். எனவே நியூசிலாந்து இத்தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை சேர்க்கும் என்று நம்புகிறேன். உலகத் தொடர்களில் அணியாக முக்கிய நேரத்தில் சிறப்பாக விளையாடும் திறன் எங்களிடம் இருக்கிறது. ஒன்றாக விளையாடுவது என்பது நாங்கள் அனைவரும் சேர்ந்து வளர்த்துக் கொண்ட ஒரு திறமையாகும்” என்று கூறினார்.