இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக தாக்கி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் இந்திய அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா என இருவரிடமும் தனது சில்மிஷத்தை காண்பித்தார். கில்லை நோக்கியும், ரோஹித்தை நோக்கியும் பல கேள்விகளை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.
அதேபோல ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அஸ்வின் மற்றும் விகாரி ஆகிய ஜோடி விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களை வீழ்த்த முடியாததால் விரக்தி அடைந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் அஷ்வினை நோக்கி ஸ்லெட்ஜிங் செய்துகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அஸ்வினை உசுப்பேற்றும் அளவிற்கு சீண்டிய அவர் நான்காவது போட்டியின்போது பிரிஸ்பேன் மைதானத்திற்கு வாருங்கள் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என சீண்டினார்.
அதற்கு பதிலளித்த அஸ்வின் இந்தியா வந்ததும் அது உங்களது கடைசி தொடராக இருக்கும் என அவர் பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் பெயின் தொடர்ச்சியாக அஸ்வினை சீண்டியதால் அஸ்வின் நடுவரிடம் புகார் அளித்தார். அதன் பின்னர் சில நொடிகளிலேயே விகாரி கொடுத்த கேட்சை கோட்டை விட்டார். இந்நிலையில் ஆடுகளத்தில் அஸ்வினின் சீண்டியதற்காக தற்போது டிம் பெயின் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :
நான் களத்தில் செயல்பட்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் என்னுடைய அணியை சரியாக வழி நடத்த விரும்பினேன். ஆனால் நேற்று கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படவில்லை. நெருக்கடி காரணமாக தவறான செயலில் ஈடுபட்டு விட்டேன். என்னுடைய தரத்தை நானே குறைத்துக்கொண்டேன். நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு அஸ்வினுக்கு போன் செய்து இதுகுறித்து மன்னிப்பும் கேட்டேன்.
நேற்றைய போட்டியில் அடிக்கடி பேசிக் கொண்டே இருந்தேன். முட்டாள் போல் காட்சியளித்தேன், அதே சமயத்தில் கேட்ச்சையும் கோட்டை விட்டேன் என்றும் பின்னர் நானும் அஷ்வினும் சிரித்துக் கொண்டோம் அதன்பிறகு எல்லாம் சரியாகி விட்டது. அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறேன் என டிம் பெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.