வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆகஸ்ட் 3ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 149/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் போவல் 48 (32) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் மற்றும் அர்ஷிதீப் அய்ங்க தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 150 ரன்களை துரத்திய ஆரம்ப முதலே சவாலான பிட்ச்சில் சீரான ரன்களில் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவரில் 145/9 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய், ஜேசன் ஹோல்டர் ரொமாரியா செப்ஃபார்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இப்போட்டியில் திலக் வர்மா அறிமுகமாக களமிறங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு குல்தீப் யாதவின் 8வது ஓவரின் 3வது பந்தில் ஜான்சன் சர்லஸ் மிட் விக்கெட் திசையில் சிக்சர் அடிக்க முயற்சித்தார்.
அசத்திய வர்மா:
ஆனால் வேகத்தை தவறாக கணித்த அவரின் பேட்டில் டாப் எட்ஜ் வாங்கிய பந்து உள் வட்டத்திற்குள்ளும் அல்லாமல் பவுண்டரி எல்லையையும் நெருங்காமல் நடுவே சென்றது. அதை டீப் மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த இளம் வீரர் திலக் வர்மா பந்தை பார்த்துக் கொண்டே வேகமாக சுமார் 10 மீட்டருக்கு மேல் ஓடி வந்து சரியான சமயத்தில் தாவி டைவ் அடித்து அற்புதமான கேட்ச் பிடித்து 3 முறை சுழன்று தன்னை பேலன்ஸ் செய்து கொண்டார்.
பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் நீண்ட தூரம் ஓடி வந்து சரியான சமயத்தில் அவர் பிடித்த அபாரமான கேட்ச்சை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாராட்டியதை போலவே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் இயன் பிஷப் தனக்கே உரித்தான காந்த குரலில் நேரலையில் வர்ணனையாளராக பாராட்டினார். அத்துடன் நிக்கோலாஸ் பூரான் 41 (34) ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து கொடுத்த கேட்ச்சையும் பிடித்த அவர் மொத்தமாக தன்னுடைய அறிமுக போட்டியிலேயே 2 கேட்ச்களை பிடித்தார்.
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே 2 கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னா மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோரது சாதனைகளை திலக் வர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2006இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில் சுரேஷ் ரெய்னாவும் 2010இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தன்னுடைய அறிமுக போட்டியில் பியூஸ் சாவ்லாவும் தலா 2 கேட்ச்கள் பிடித்திருந்தனர்.
அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மிகவும் இளம் வயதில் 2 கேட்சுகள் பிடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. சுரேஷ் ரெய்னா : 20 வருடங்கள் 4 நாட்கள்
2. ரவீந்திர ஜடேஜா : 20 வருடங்கள் 192 நாட்கள்
3. திலக் வர்மா : 20 வருடங்கள் 268 நாட்கள்
முன்னதாக கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட அவர் இந்த வருடம் 11 போட்டிகளில் 343 ரன்களை 164.11 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த காரணத்தால் தற்போது இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று பேட்டிங்கிலும் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 39* (22) ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அதன் வாயிலாக தங்களுடைய அறிமுக டி20 இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் (குறைந்தது 30 ரன்கள்) விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. திலக் வர்மா : 177.27, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2023*
2. இஷான் கிசான் : 175, இங்கிலாந்துக்கு எதிராக, 2021
3. அஜிங்க்ய ரகானே : 156.41, இங்கிலாந்துக்கு எதிராக, 2011
இதையும் படிங்க:IND vs WI : எளிதான இலக்கை சேசிங் செய்ய திணறிய இந்தியா, கையிலிருந்த வெற்றியை நூலிழையில் கோட்டை விட்டது எப்படி?
அந்த வகையில் ஐபிஎல் தொடரிலேயே சுரேஷ் ரெய்னாவை போல் செயல்படுவதாக நிறைய ரசிகர்கள் பாராட்டிய நிலையில் தற்போது சர்வதேச அளவிலும் இந்தியாவுக்காக அவரைப் போலவே திலக் வர்மா கால் தடம் பதித்துள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.