
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசியது.
அதன்படி 50 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 103 ரன்களும், ராகுல் 88 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் கோலியும் 51 அடிக்க பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.
அதனைத் தொடர்ந்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து சார்பாக ராஸ் டைலர் 84 பந்துகளில் 109 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். மேலும் அந்த அணியின் கேப்டன் லேதம் மற்றும் துவக்க வீரர் ஹென்றி நிகோலஸ் ஆகியோர் அரைசதம் அடித்து வெற்றிக்கு பங்களித்தனர்.
இந்நிலையில் போட்டியில் பந்து வீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக இந்திய அணி எடுத்துக்கொண்டு பந்து வீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்தில் பேச முடிகாத ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவீத அபராதம் அணி வீரர்களுக்கு போட்டிக்கான சம்பளத்திலிருந்து விதிக்கப்படும்.
அதன்படி நேற்றைய போட்டியில் இந்திய அணி 4 ஓவர்கள் வரை மெதுவாக வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணிகளுக்கு தலா 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளும் இந்த தவறு நடந்தது. அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் மீது ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.