யார் இந்த கே.எஸ் பரத் ? இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகும் அளவிற்கு இவர் செய்த சாதனை என்ன ? – விவரம் இதோ

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய டெஸ்ட் அணி கடந்த 07ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரிஷப் பன்ட்டுடன் சேர்த்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்திருந்த விருத்திமான் சாஹா, கொரானா தொற்றிலிருந்து சமீபத்தில்தான் குணமடைந்திருக்கிறார் என்பதால், அவர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின்போது சிறந்த உடல் நிலையில் இருப்பாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மூன்று மாதங்கள் நடைபெற இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இன்னொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிச்சயமாக தேவை எண்ணிய இந்திய தேர்வுக் குழு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரரான கே எஸ் பரத்தை மூன்றாவது விக்கெட் கீப்பராக, பேக்கப் ப்ளேயர்ஸ் வரிசையில் இணைத்திருக்கிறது.

KS-bharath

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரன், அர்ணாஸ் நக்வஸ்வாலா ஆகிய வீரர்களைப் போலவே கே எஸ் பரத்தையும் பெரும்பாலான இந்திய கிரக்கெட் ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை. யார் இந்த கே எஸ் பரத்? அவர் செய்த சாதனை என்ன? அவரைப் பற்றிய ஒரு அலசல் ரிப்போர்ட் கீழே வழங்கப்பட்டிருக்கிறது. 27 வயதான வலது கை, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே எஸ் பரத், ரஞ்சி ட்ராபி போட்டிகளில் ஆந்திர பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி ட்ராபி தொடரில், தன்னுடைய 19 வயதிலேயே அறிமுகமான இவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி ட்ராபி தொடரில்தான் தன்னுடைய முழுத் திறனையும் வெளிப்படுத்தி காட்டினார்.

அந்த தொடரில் அதி அற்புதமாக விளையாடி பரத், கோவா அணிக்கு எதிராக 311 பந்துகளில் 308 ரன்கள் அடித்து, ரஞ்சி ட்ராபி தொடர்களில் முச்சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். இந்த முச்சதத்தையும் தவிர்த்து, மேலும் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்து அசத்திய இவர், அத்தொடரில் மொத்தம் 758 ரன்களை எடுத்தார். டெஸ்ட் போட்டியிலேயே இப்படி அதிரடி காட்டிய அவரை, அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், ரூபாய் பத்து லட்சம் கொடுத்து அணிக்குள் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஆனாலும் அத்தொடரில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

bharath

மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை டெஸ்ட் போட்டிக்கு மாற்றிய பரத், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வயநாட்டில் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 139 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அசத்தினார். இந்திய அணியில் ரிஷப் பன்ட் களமிறங்கும் அதே இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டும் பரத்தின் மீது இந்திய தேர்வுக் குழுவின் கவனம் திரும்பியது. அதே ஆண்டு நடைபெற்ற துலீப் ட்ராபியிலும் கெத்து காட்டிய பரத்தை, பங்ளாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சாஹாவிற்கு மாற்றாக பேக்கப் ப்ளேயாராக தேர்ந்தெடுத்தது இந்திய தேர்வுக் குழு. மேலும் அத்தொடர் முடிந்த அடுத்த ஆண்டு(2020) தொடக்கத்திலேயே நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பேக்கப் ப்ளேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,

IND

அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே எஸ் பரத். டெஸ்ட் போட்டிகளிலேயே அதிரடி காட்டும் திறமை வாய்ந்த கே எஸ் பரத்தின் மீது நம்பிக்கை வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது ரூபாய் 20 இலட்சம் கொடுத்து அணிக்குள் எடுந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கே எஸ் பரத் இதுவரை 78 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 4283 ரன்களை அடித்துள்ளார். அதில் 9 சதங்களும் 23 அரை சதங்களும் அடங்கும். மேலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டு 271 கேட்சுகள் பிடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 31 ஸ்டம்பிங்கையும் செய்திருக்கிறார்.

Advertisement