இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இந்திய மண்ணில் 15 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா 1 – 0* (2) என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் இந்தியா குறைந்தபட்ச இலக்கை (124) சேசிங் செய்ய முடியாமல் மோசமான சாதனை தோல்வியைச் சந்தித்தது.
அந்த தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் கடந்த 2024 நியூசிலாந்து தொடரில் இந்தியா சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் தோல்வியைச் சந்திப்பதற்கு சுழலுக்கு சாதகமான பிட்ச்சுகள் அமைக்கப்பட்டிருந்தது முக்கிய காரணமானது. ஆனால் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதேப் போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியைச் சந்தித்துள்ளது.
சொந்த காசில் சூனியம்:
ஏனெனில் தாங்கள் தான் கொல்கத்தாவில் அது போன்ற பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். இருப்பினும் அதில் இந்தியா நன்றாக விளையாடாதது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததாகவும் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவதற்காக அமைத்த சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா தோற்றதாக கேப்டன் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
அப்படி சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்ட இந்தியாவில் தம்முடைய வாழ்நாளில் ஒருமுறை கூட ஒரு டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் விளையாடியதில்லை என்றும் பவுமா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் இந்தியா தங்களது சொந்த ஆட்டத்தில் வீழ்ந்தது என்பது உண்மையாக இருக்கலாம். அனேகமாக அவர்கள் தங்களுடைய அணிக்கு சாதகமாக பிட்ச் இருக்க வேண்டுமென்று கேட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன்”
பவுமா கருத்து:
“இங்குள்ள மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதைத் தெரிந்தே நாங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளோம். ஸ்பின்னர்களின் பார்வையில் பிட்ச் 3 அல்லது 4வது நாளிலிருந்து சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். ஆனால் அதுவே சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கு நீங்கள் வரும் போது அதையே எதிர்பார்க்க வேண்டும். இந்தியாவில் எப்போதாவது நான் 5வது நாளில் விளையாடியதாக எனக்குத் தெரியவில்லை”
இதையும் படிங்க: கம்பீர் செஞ்சது முட்டாள்தனமான வேலை.. இப்படி பண்ணா இந்தியா எப்படி ஜெய்க்க முடியும்? ஸ்ரீகாந்த் விளாசல்
“சொல்லப்போனால் 4வது நாளில் கூட நான் விளையாடியதில்லை. அங்கே பேய் எதுவும் இருக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஸ்பின்னர்களின் பார்வையில் அது கொஞ்சம் தந்திரமாக இருந்தது. பந்துகள் நன்றாக எழும்பி வந்தன. மற்ற பந்துகள் திரும்பின. அதனால் பேட்ஸ்மேன்கள் பேட்டை கிடைமட்டமாக வைத்து வலுவாக அடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்” என்று கூறினார்.



