ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கிய 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல உலகின் டாப் 16 அணிகள் களமிறங்கின. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வகையில் வரலாற்றில் 8வது முறையாக நடைபெறும் இத்தொடரில் முதல் சுற்றில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் உட்பட 4 அணிகள் தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே வெளியேறிய நிலையில் ஆசிய சாம்பியன் இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து துவங்கிய சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து நியூசிலாந்து அதிர்ச்சி கொடுத்தது.

அந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டி அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. வருண பகவான் கருணையுடன் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் போராடி 159/8 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* (42) ரன்களும் இஃப்திகர் அகமது 51 (34) ரன்களும் எடுத்தனர்.
லட்சிய பயணம்:
இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன்பின் 160 ரன்களைச் சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார், அக்சர் படேல் என டாப் 4 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 31/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியாவை அடுத்ததாக நங்கூரமிட்டு செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் 113 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி அழைத்து வந்தனர்.

அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது 40 (37) ரன்களில் பாண்டியாவும் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் அவுட்டானதால் பரபரப்பு எற்பட்டது. இருப்பினும் அந்த ஓவரில் நோ-பால், 2 ஒய்ட் உட்பட தடுமாற்றமாக வீசிய நவாஸ் வீசிய கடைசிப் பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது தமிழகத்தின் அஷ்வின் லாவகமாக தூக்கி அடித்து 20 ஓவர்களில் 160/6 ரன்களை எடுக்க வைத்து இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றிக்கு விராட் கோலி 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்களை விளாசி கருப்பு குதிரையாக செயல்பட்ட விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதனால் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பையில் முதல் முறையாக பரிசளித்த வரலாற்று தோல்விக்கு பாகிஸ்தானை பழி தீர்த்துள்ள இந்தியா இந்த வருடம் முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மேலும் 2007க்குப்பின் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக ஆஸ்திரேலியா பயணித்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஆரம்பத்திலேயே பரம எதிரியை மண்ணை கவ்வ வைத்து இந்த லட்சிய பயணத்தை வெற்றியுடன் துவக்கியுள்ளது.

குறிப்பாக எதிரணியில் ஷாஹீன் அஃப்ரிடி இருந்தும் தங்களிடம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமலேயே வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா அடுத்ததாக தன்னுடைய 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. வரும் அக்டோபர் 27ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு உலகப் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அப்போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்தை வலுவான இந்தியா எளிதாக தோற்கடிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
அந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் நாக்-அவுட் சுற்று செல்வதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே 60 – 70% உறுதியாகிவிடும். அப்போட்டியை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸாடார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக பார்க்கலாம். அதே சமயம் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம்.



