துணை பயிற்சியாளராக ரோஹித் சர்மாவின் நண்பரை கொண்டு வரும் கம்பீர்.. கர்நாடக வீரரும் இணைய வாய்ப்பு

BCCI India
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றார். எனவே அவருக்குப் பின் இந்தியாவின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியாவின் சரித்திர வெற்றிகளுக்கு உதவிய அவர் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா கோப்பை வெல்ல உதவியதால் தற்போது அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவு பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது.

- Advertisement -

துணை பயிற்சியாளர்கள்:
முன்னதாக ராகுல் டிராவிட்டுடன் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் ஓய்வு பெற்றுள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்களும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். சொல்லப்போனால் தமக்கு தகுந்த துணைப் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க கௌதம் கம்பீருக்கு தேவையான அதிகாரத்தை ஏற்கனவே பிசிசிஐ வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அபிஷேக் நாயரை நியமிக்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவுக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 103 முதல் தரம் மற்றும் 99 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார். அதை விட கொல்கத்தா அணியில் கடந்த பல வருடங்களாக அவர் துணைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அங்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதற்கு அபிஷேக் நாயர் தான் முக்கிய காரணமாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் பலமுறை கூறியுள்ளார். அதே போல ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியதால் ரோஹித் சர்மாவின் நெருங்கிய நண்பராகவும் அபிஷேக் நாயர் திகழ்கிறார். அதன் காரணமாக அவரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்தால் ரோஹித் மற்றும் இதர வீரர்களுடன் இணைந்து நன்றாக செயல்படுவார் என கம்பீர் கருதுவதாக தெரிய வருகிறது.

இதையும் படிங்க: ஆஹா ரோஹித் உள்ளிட்ட யாருக்குமே கிடைக்காத 2 பரிசை பெற்ற சிராஜ்.. அள்ளிக்கொடுத்த தெலுங்கானா அரசு

அதே போல பவுலிங் பயிற்சியாளராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் வினய் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்தியாவுக்காக 31 ஒருநாள், 9 டி20, 1 டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 504 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனவே அவர்களின் நியமனம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement