
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு ஜூலை நான்காம் தேதி மும்பையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜூன் மாதம் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா 17 வருடங்களுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
அதனால் ஜூலை நான்காம் தேதி அதிகாலையிலேயே விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் இந்திய அணிக்கு வரவேற்பு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணியினர் மாலை 5 மணிக்கு மும்பை கடற்கரை சாலையில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக வந்து வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடினர். அப்போது கடற்கரை சாலை ஸ்தம்பிக்கும் அளவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு அணிக்கு வரவேற்பு கொடுத்தனர்.
புல்லரித்த ரசிகர்கள்:
அந்த அன்பான ரசிகர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த இந்திய அணியினர் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றனர். அங்கேயும் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணியை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து பிசிசிஐ சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இந்திய அணிக்கு பாராட்டும் 125 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.
அதன் பின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்றினார்கள். இறுதியாக இந்திய அணியினர் கோப்பையுடன் வான்கடே மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெற்றியை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது வான்கடே மைதானத்தில் பல்வேறு பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
அதற்கு தகுந்தார் போல் ரசிகர்களுடன் சேர்ந்து விராட், கோலி ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய அணியினர் நடனம் ஆடினார்கள். அதன் உச்சமாக இசைப்புயல் ஏஆர் ரகுமான் பாடிய “வந்தே மாதரம்” பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது. அப்போது தேசிய கொடியை தனது தோளில் அணிந்திருந்த விராட் கோலி தனது 2 கைகளையும் கீழிருந்து உயர்த்தி வெறித்தனமாக வந்தே மாதரம் பாடலை ரசிகர்களுடன் சேர்ந்து பாடினார்.
இதையும் படிங்க: முதல் முறையா 2 – 3 முறை அழுதுட்டேன்.. விராட், ரோஹித் மாதிரி ரிட்டையர்மென்ட் எப்போது? ஜஸ்ப்ரித் பும்ரா பேட்டி
அதைப் பார்த்து ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா உள்ளிட்ட இதர இந்திய வீரர்களும் உணர்ச்சிபூர்வமாக வெறித்தனமாக வந்தே மாதரம் பாடலை பாடினார். அதனால் ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் நாட்டுப்பற்று உணர்ச்சியால் பொங்கி எழுந்து வந்தே மாதரம் பாடலை பாடியது. மொத்தத்தில் நேற்றைய வரவேற்பு விழாவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் மொத்த இந்திய ரசிகர்களையும் புல்லரிக்க வைத்தது என்றால் மிகையாகாது.