தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி துவங்கியது. அப்போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 9.30 மணிக்குத் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். தங்களுடைய அணியில் ககிசோ ரபாடா காயத்தால் விளையாட மாட்டார் என்று அவர் அறிவித்தது தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவாகவும் இந்தியாவுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரேல் விளையாடுவார் என்று கேப்டன் கில் அறிவித்தார்.
மாஸ் மாற்றம்:
அதை விட 3வது இடத்தில் விளையாடி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பைப் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமான சுதர்சன் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறினார். அதனால் சில விமர்சனங்களை சந்தித்த அவர் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடினார்.
குறிப்பாக 2வது போட்டியில் 87 ரன்கள் அடித்த அவர் எளிதான சதத்தை தவற விட்டார். மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் கடந்த 2024 நியூசிலாந்து தொடர் முதலே ஆல் ரவுண்டராக அசத்தி வருகிறார். எனவே அவரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்கான வாய்ப்பை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பு ரசிகர்கள் எதிர்பாராத வித்தியாசமான மாற்றமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
இந்திய அணி:
இது பற்றி கேப்டன் கில் பேசியது பின்வருமாறு. “(2027) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மட்டுமே நான் டாஸ் வெல்வேன் என்று நினைக்கிறேன். பிட்ச் நன்றாக தெரிகிறது. அதில் ஆரம்பத்திலேயே கொஞ்சம் நகர்வு இருக்கும் என்பதால் அதை நாங்கள் பயன்படுத்துவோம் என்று நம்புகிறேன். மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் எங்களுடைய டெஸ்ட் அணி வாய்ப்பு கிடைக்கும் போது அசத்துவதற்கு தயாராக இருக்கிறது”
இதையும் படிங்க: 117 ரன்ஸ்.. சேசிங்கில் கம்பீருக்கு திறமையை காட்டிய ருதுராஜ்.. அபார சதத்தால் தெ.ஆ’வை சாய்த்த இந்தியா ஏ
“இந்த 2 முக்கியமான 2 டெஸ்ட் போட்டிகளில் அசத்துவதற்கு நாங்கள் பசியுடன் இருக்கிறோம். பிட்ச் முதல் சில நாட்களுக்கு நன்றாக இருக்கும். பின்னர் எங்களுக்கு சுழல் கிடைக்கும் என்று நம்புகிறோம். நிதிஷ் ரெட்டிக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுகிறார் அக்சர் பட்டேலும் அணிக்குள் வந்துள்ளார்” என்று கூறினார். இந்திய அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.



