ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். கடைசியாக 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கே இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தார். அதன் பின் 21 வருடங்கள் கழித்து அதே போன்ற முடிவை ரோஹித் சர்மா எடுத்துள்ளார்.
முதலில் பவுலிங்:
குறிப்பாக கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற 5 பகல் டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்து வீசிய அணிகளே வென்றது. அதன் காரணமாக இப்போட்டியில் ரோகித் அந்த முடிவை எடுத்திருப்பார் என்று சொல்லலாம். மேலும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று ரோஹித் சர்மா அறிவித்தார்.
மேலும் கடந்த போட்டியில் சுமாராக பந்து வீசிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவதாகவும் ரோகித் தெரிவித்தார். மற்ற படி கடந்த போட்டியில் விளையாடிய எஞ்சிய வீரர்கள் இந்தப் போட்டியிலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 28-0 ரன்கள் எடுத்தபோது மழை வந்தது.
விராட் கோலியின் சாதனை:
முன்னதாக இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கினார். அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 100* சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 போட்டிகளில் விளையாடிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: இங்க உள்ள வந்ததுமே அந்த பாசிட்டிவ் வைப் வந்துடுச்சி.. காபா மைதானத்தில் என்ட்ரி கொடுத்த பின் – பண்ட் பேட்டி
முதல் வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 போட்டிகளில் விளையாடி அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதை அடுத்து இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்ப இந்தியா போராட உள்ளது. அதனால் 2021இல் இதே மைதானத்தில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது போல இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.