இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 376 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113, ரவீந்திர ஜடேஜா 86, ஜெய்ஸ்வால் 56 ரன்கள் குவித்தனர்.
அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 227 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 81-3 ரன்கள் குவித்து மொத்தம் 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு சாதகம்:
அதனால் பாகிஸ்தானை போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசம் முதல் போட்டியிலேயே மண்ணை கவ்வுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியினர் பிறந்தது முதலே சொந்த மண்ணில் எஸ்ஜி பந்துகளில் விளையாடுவதாக வங்கதேச வீரர் தஸ்கின் அஹ்மத் கூறியுள்ளார். மறுபுறம் வங்கதேச அணியினர் கூகபுரா பந்துகளில் விளையாடுவதாக அஹ்மத் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே வங்கதேசம் தடுமாறுவதாக தெரிவிக்கும் அவர் இல்லையெனில் பாகிஸ்தானை போல இப்போதும் இந்தியாவை தங்களால் வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி இரண்டாவது நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் நாங்கள் நன்றாக விளையாடியதால் வென்றோம். இந்தியாவில் சூழ்நிலைகள் சவாலாக இருக்கிறது. இந்தியா எஸ்ஜி பந்துகளால் அதிக சாதகத்தை பெறுகிறது”
பந்து தான் வித்யாசம்’
“இந்திய வீரர்கள் சிறு வயது முதலே எஸ்ஜி பந்துகளில் விளையாடுகின்றனர். எனவே எங்களை விட அந்தப் பந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இந்தியாவுக்கு நன்றாக தெரிகிறது. பேட்டிங்கில் நாங்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் நன்றாக விளையாடினோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தவறுகளை ஒப்புக்கொண்டனர். ஒருவேளை புதிய பந்தில் நாங்கள் நன்றாக விளையாடியிருந்தால் நிறைய விக்கெட்டுகளை இழந்திருக்க மாட்டோம்”
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் 6 ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
“மிடில் ஆர்டருக்கு புதிய பந்தில் விளையாடுவது கடினமாக இருக்கிறது. அதே சமயம் சொந்த மண்ணிலும் வெளிநாட்டிலும் இந்தியா வலுவான எதிரணி. அவர்கள் மற்றவர்களைப் போலவே சொந்த மண் சாதகத்தை எடுத்துக் கொள்கிறார்கள். எங்களுடைய சொந்த மண்ணில் நாங்களும் டாமினேட் செய்கிறோம். பாகிஸ்தானில் எதிரணியும் சூழ்நிலைகளும் வித்தியாசமாக இருந்தது. இங்கே நாங்கள் நன்றாக பந்து வீசியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் சராசரிக்கு நிகராக இல்லை” என்று கூறினார்.



