வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் துவங்குகிறது. ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா அத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக விளையாடினாலும் டி20 தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ நேற்று சவால் விடுத்திருந்தார். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் பெரிய அணி என்பதை தாண்டி போட்டி நாளன்று யார் அசத்துகிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் அறிமுகமானார்.
ரோஹித்துக்கே டக் அவுட்:
அப்போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக ஜாக்கிரதையாக பந்து வீசுமாறு தங்களுடைய அணி வீரர்களே தம்மை எச்சரித்ததாக தன்சிம் ஹசன் கூறியுள்ளார். ஆனால் அதற்காக பயப்படாமல் இரண்டாவது பந்திலேயே ரோஹித் சர்மாவை டக் அவுட்டாக்கியதாக தன்சிம் ஹசன் தெரிவித்துள்ளார். அதே போல இத்தொடரிலும் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது என்னுடைய அறிமுகப் போட்டி. அப்போட்டியில் எதிரணியான இந்திய அணியில் ரோஹித் சர்மா இருந்தார். உண்மையில் அதைப் பற்றி நான் ஒன்றுக்கு 2 முறை கூட சிந்திக்கவில்லை. ஆனால் நான் புதியவர் என்பதால் ரோகித் சர்மாவை சமாளிக்க தயாராக இருக்க முடியாது என்று என்னுடைய அணியினர் சொன்னார்கள்”
இந்தியாவுக்கு எச்சரிக்கை:
“இருப்பினும் என்னுடைய பலத்தைப் பின்பற்றி என்னால் விளையாட முடியும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். குறிப்பாக சரியான இடத்தில் வீசி புதிய பந்தை ஸ்விங் செய்தால் உலகின் எந்த பேட்ஸ்மேனையும் என்னால் திணறடிக்க முடியும். என்னிடம் என்ன பலம் இருக்கிறது என்பதைப் புரிந்து அதை களத்தில் பயன்படுத்தினால் எதிரணியை பற்றி கவலைப்படாமல் மிரட்ட முடியும் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரின் 15921 ரன்ஸ் உலக சாதனையை உடைக்காமல் ஓய மாட்டீர்களா? ஜோ ரூட் பதில்
அந்த வகையில் வங்கதேச அணியின் சவாலை சமாளித்து இந்திய அணியினர் வெல்வதற்கு தயாராகியுள்ளனர். சொல்லப்போனால் இத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் சூரியகுமார் தலைமையில் இளம் இந்திய அணி விளையாட உள்ளது. எனவே இளம் இந்திய வீரர்கள் சவால் விடும் வங்கதேசத்தை வீழ்த்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



