26 சிக்ஸ்.. 366 ரன்ஸ்.. 202.21 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆப்கன், நியூசிலாந்து வீரர்களை மிஞ்சிய இந்திய வீரர்.. புதிய 2 உலக சாதனை

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பையின் 2024 சீசனில் ஜனவரி 26ஆம் தேதி தெலுங்கானாவில் உள்ள என்எப்சி மைதானத்தில் துவங்கிய 75வது லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அருணாச்சலப் பிரதேசம் 172 ரன்களுக்கு ஆல் அட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக டெச்சி டோரியா 97* ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கார்த்திகேயா மற்றும் மெலிந் குமார் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்கள் தன்மய் அகர்வால் மற்றும் கேப்டன் ராகுல் சிங் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

உலக சாதனை:
குறிப்பாக டி20 போல அருணாச்சல பிரதேச பவுலர்களை துவம்சம் செய்து 40.2 ஓவரில் 449 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ராகுல் சிங் சதமடித்து 185 (105) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவருடன் சேர்ந்து முரட்டுத்தனமான வேகத்தில் விளையாடிய தன்மய் அகர்வால் முதல் நாளிலேயே முச்சதம் விளாசி 323 ரன்கள் குவித்தார்.

குறிப்பாக 147 பந்துகளில் 300 ரன்கள் அடித்த அவர் முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது நாளிலும் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த அவர் 34 பவுண்டரி 26 சிக்சருடன் 366 (181) ரன்களை 202.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அந்த வகையில் இப்போட்டியில் 26 சிக்ஸர்களை அடித்த அவர் உலகிலேயே ஒரு முதல் தர இன்னிங்ஸ் மற்றும் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2015இல் நியூசிலாந்து வீரர் கோலின் முன்ரோ ஆக்லாந்து அணிக்காக சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட் அணிக்கு எதிராக ஒரு முதல் தர இன்னிசையில் அதிகபட்சமாக எதிராக 23 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே போல ஆப்கானிஸ்தான் வீரர் சபிஃகுல்லா சின்வாரி கடந்த 2018இல் காபுல் அனிக்காக பூஸ்ட் அணிக்கு எதிராக ஒரு முதல் தர போட்டியில் அதிகபட்சமாக 24 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: அஜாக்கிரதையால் பறிபோன விக்கெட்.. அடுத்த ஓவரிலேயே ஆஃப் ஸ்டம்ப்பை பறக்கவிட்ட பும்ரா.. போராடும் இங்கிலாந்து

அத்துடன் உலகிலேயே ஒரு முதல் தர போட்டியில் 200+ ஸ்டிரைக் ரேட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் தன்மய் அகர்வால் படைத்துள்ளார். அவருடைய அதிரடியால் ஹைதராபாத் 615/4 ரன்கள் விளாசி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் டிக்ளர் செய்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்த அருணாச்சலப் பிரதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டிய ஹைதராபாத் இன்னிங்ஸ் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அருணாச்சல பிரதேசத்திற்கு அதிகபட்சமாக திவ்யான்சு யாதவ் 91 ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தனய் தியாகராஜன் 3, சாய்ராம் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement