இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த வருடம் கார் விபத்தால் காயத்தை சந்தித்தார். அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் அதிலிருந்து குணமடைந்து 2024 ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடினார். அதைத் தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல பங்காற்றினார்.
அந்த வரிசையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 635 நாட்கள் கழித்து ரிஷப் பண்ட் தற்போது வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் 2வது இன்னிங்ஸில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் சதமடித்து 109 ரன்கள் விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கம்பேக் கொடுத்துள்ளார்.
தோனிக்கு நிகராக ரிஷப் பண்ட்:
இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார். சொல்லப்போனால் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் அடித்த 6 சதங்களை ரிஷப் பண்ட் 33 போட்டிகளிலேயே அடித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே தோனியை மிஞ்சி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் தோனி மட்டுமின்றி ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டையும் முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் வருங்காலங்களில் உலக சாதனை படைப்பார் என்று முன்னாள் வங்கதேச வீரர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரலை வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு. “உலகிலேயே ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக அதிக சதங்கள் அடிப்பார் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும்” என்று கூறினார்.
இன்னும் 12 சதங்கள் அடிப்பாரா:
அதே நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் 20க்கும் மேற்பட்ட சதங்கள் அடிப்பதை நான் கண்டிப்பாக பார்ப்பேன்” என்று கூறினார். அவர்கள் கூறுவது போல தற்போது 26 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரிஷப் பண்ட் இன்னும் 10 – 13 வருடங்கள் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் சேவாக்கிற்கு அப்றம் ரிஷப் பண்ட்கிட்ட தான் இது இருக்கு.. இதயத்தை ஜெயிச்சுடீங்க.. பசித் அலி
மறுபுறம் 17 சதங்களுடன் ஆடம் கில்கிறிஸ்ட் உலகிலேயே அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார். அடுத்த 10 வருடங்களில் ரிஷப் பண்ட் இன்னும் 12 சதங்கள் அடிப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. அதை செய்தால் கில்கிறிஸ்டை முந்தி ரிஷப் பண்ட் உலக சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



