ரஞ்சிக் கோப்பையின் 2024 – 25 சீசன் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கியது. அதில் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் எலைட் குரூப் டி பிரிவில் இடம் வகிக்கும் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய சௌராஷ்டிரா முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்விக் தேசாய் 0, நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா 16, செல்டக் ஜேக்சன் 21, ராணா 15 என அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக வசவடா போராடி 62*, சைரங் ஜானி 34 ரன்கள் எடுத்தனர்.
ஜெகதீஷன் அபாரம்:
தமிழ்நாடு அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சாய் கிஷோர், முகமது, சோனு யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் சாய் சுதர்சன் ஆகியோர் ஆரம்பத்திலேயே அபாரமாக விளையாடி 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். அதில் சாய் சுதர்சன் அரை சதமடித்து 82 ரன்களிலும் ஜெகதீசன் சதமடித்து 100 ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.
அதே போல மிடில் ஆர்டரில் ரஞ்சன் பிரதோஷ்பால் 49, பாபா இந்திரஜித் 40, ஆண்ட்ரே சித்தார்த் 38 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அதனால் தமிழ்நாடு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகி முன்னிலை பெற்றது. சௌராஷ்ட்ரா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி:
அதன் பின் 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய சௌராஷ்டிரா அணிக்கு ஹர்விக் தேசாய் 5 ரன்களில் அவுட்டானார். அப்படியே ஜானி 3, ராணா 6, புஜாரா 0, ஹர்பித் வசவடா 22, பிரேரக் மன்கட் 1 என 5 முக்கிய பேட்ஸ்மேன்களை குர்ஜப்நீத் சிங் தன்னுடைய துல்லியமான வேகத்தால் சொற்ப ரன்களில் காலி செய்தார். அதனால் 35-5 என ஆரம்பத்திலேயே சரிந்த சௌராஷ்ட்ராவுக்கு மிடில் ஆர்டரில் செல்டன் ஜாக்சன் 38 ரன்கள் எடுத்துப் போராடினார்.
இதையும் படிங்க: 55 பந்தில் 107 ரன்ஸ்.. இலங்கையை சொந்த மண்ணில் வெளுத்த வெ.இ.. ஒரே பார்ட்னர்ஷிப்பால் வெற்றி
அதையும் தாண்டி இறுதியில் சௌராஷ்ட்ராவை வெறும் 94 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி தெறிக்க விட்ட தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய தமிழ்நாட்டுக்கு குர்ஜப்நீத் சிங் 6, சோனு யாதவ் 3, கேப்டன் கிசோர் 1 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் போட்டியிலேயே சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு எலைட் குரூப் டி பிரிவின் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இத்தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.



