வளர்ந்த இடத்துக்கு ரியல் ஹீரோவாக சென்ற கிங் நடராஜன்.. சேலத்தில் நடந்த நெகிழ்ச்சியான பதிவு

T natarajan
- Advertisement -

தமிழக வீரர் நடராஜன் தமிழ்நாட்டில் உள்ள பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த அவர் முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடத் துவங்கினார். அதைத் தொடர்ந்து டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவருக்கு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கழற்றி விட்டதை தொடர்ந்து ஹைதராபாத் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசிய அவர் ஹைதராபாத் அணியின் வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் தமிழ்நாட்டின் யார்க்கர் கிங் என்று தமிழக ரசிகர்கள் அவரை பாராட்டினர். அப்படி ஐபிஎல் தொடரில் அசத்தியதால் 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் நெட் பவுலராக நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

யார்க்கர் கிங் நடராஜன்:

அதிர்ஷ்டவசமாக அப்போது சில முக்கிய வீரர்கள் காயமடைந்ததால் அவருக்கு 3 வகையான இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நன்றாகவே செயல்பட்ட நடராஜன் இந்திய அணியின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக காபாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவின் வரலாற்று வெற்றியில் தம்முடைய பங்காற்றினார்.

இருப்பினும் அதன் பின் காயமடைந்து குணமடைந்த அவருக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் 2024 ஐபிஎல் தொடரில் 19 விக்கெட்டுகள் எடுத்த நடராஜன் ஹைதராபாத் ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அடுத்ததாக நடைபெறும் துலீப் கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

ஹீரோவாக நடராஜன்:

இந்நிலையில் நடராஜன் தம்முடைய சொந்த ஊரில் உள்ள சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழா ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். தாம் படித்து பயின்று வளர்ந்த பள்ளிக்கு பல வருடங்கள் கழித்து சென்ற அவர் அங்குள்ள மாணவர்களிடம் உரையாடி மகிழ்ந்தார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 2 மேட்ச் வின்னர்ஸ் இல்ல.. இம்முறை இதை செய்யலன்னா ஆஸியில் இந்தியா ஜெய்க்க முடியாது.. ஜான் புச்சனன்

“அனைத்தும் துவங்கிய இடத்திற்கு மீண்டும் வந்தது கௌரவம். என்னைத் தலைமை விருந்தினராக அழைத்ததற்கு சின்னப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மிகவும் நன்றி. வீட்டிற்கு மீண்டும் திரும்பியதில் பெருமை” என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில் பிறந்து வளர்ந்து படித்த ஊரில் உள்ள பள்ளிக்கு தலைமை விருந்தினராக சென்ற நடராஜன் ரியல் லைஃப் ஹீரோவாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement