இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார். அடுத்த சில நாட்களில் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியும் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் அவர்கள் இருவருமே சுமாராக பேட்டிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.
அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதன் காரணமாக அவர்களை ஓய்வு பெறுமாறு ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்தனர். இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அவர்கள் முக்கிய பங்காற்றியதால் அடுத்த இங்கிலாந்து தொடரில் விளையாடுவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிசிசிஐ புதிய இந்திய அணியை உருவாக்க விரும்புகிறது.
ஓய்வுக்கான காரணம்:
எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்ததாக தெரிகிறது. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றதாக தெரிய வருகிறது. இருப்பினும் அதில் ரோஹித் சர்மாவை விட சிறப்பான ஃபிட்னெஸ் கடைபிடிக்கும் விராட் கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சதத்தை அடித்ததால் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று நம்பப்பட்டது.
ஆனால் திடீரென்று அவர் ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. அந்த ஓய்வால் 770 ரன்னில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடிக்கும் பொன்னான சாதனை வாய்ப்பை விராட் கோலி தவற விட்டுள்ளார். இந்நிலையில் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடி விட்டதாக உணர்ந்ததே விராட் கோலி ஓய்வுக்கு காரணம் என்று 1983 உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் சயீத் கிர்மனி தெரிவித்துள்ளார்.
10000 ரன்ஸ் முக்கியமல்ல:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சாதனைகளுக்காக விளையாடினார் என்று நான் கருதவில்லை. அவருக்கு அது முக்கியமல்ல. அதிகப்படியான கிரிக்கெட்டில் இருப்பது அவரை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம். இந்த முடிவை எடுக்கும் போது அவர் மீது அழுத்தம் இருந்திருக்கும் என்றும் நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க: என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறல.. விராட் கோலியுடனான உறவு குறித்து – டேவிட் வார்னர் வருத்தம்
“அவர் ஏன் ஓய்வு பெறுகிறார்? ஃபார்மில் இல்லாததாலா? அல்லது அழுத்தத்தாலா? என்ற கேள்விகளில் அர்த்தமில்லை. அது தனி நபரின் முடிவு. அவருக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. அதனால் அவர் இன்னும் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் ஒருநாள் ஓய்வு பெற வேண்டும் என்பதால் அவரது முடிவை மதிக்கிறேன். அவருடைய வருங்காலத்திற்கு வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக அசத்தியதே மற்றவர்களிடமிருந்து விராட் கோலியை வித்தியாசமாக காட்டியது. அவர் நம் நாட்டில் உள்ள பலருக்கும் உத்வேகமாக இருக்கிறார்” என்று கூறினார்.



