
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெறும் 68வது லீக் போட்டி அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்கான முதல் 3 இடங்களை கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் பிடித்து விட்டன. அதனால் மே 18ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டியில் வெல்லும் அணி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இவ்விரு அணிகளை பொறுத்த வரை 6 தொடர் தோல்விகளால் முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அதன் பின் தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அந்த அணி அதே வேகத்தில் சென்னையை தோற்கடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்புகின்றனர்.
தோனி இருப்பது நல்லதே:
மறுபுறம் வரலாற்றில் இது போன்ற பல அழுத்தமான போட்டிகளில் வெற்றிகளை கண்டுள்ள சென்னை ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ளது. எனவே அந்த அனுபவத்தை பயன்படுத்தி ஆர்சிபி அணியை தோற்கடித்து சென்னை வெல்லும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்புகின்றனர். குறிப்பாக இப்போதும் இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி சிஎஸ்கே பக்கம் இருப்பது மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தோனி எதிரணியில் இருப்பது உத்வேகத்தை கொடுக்கும் என்பதால் அது தங்களுக்கு நன்மையை கொடுக்கும் என்று ஆர்சிபி வீரர் ஸ்வப்னில் சிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாய் எங்கள் முன்னே இருப்பார். அவர் உங்களுக்கு முன்னே இருக்கும் போது நேரடியாக சில பழைய நினைவுகள் உங்களை தாக்கும். பெரிய போட்டிகளில் கூட அவர் அனைத்தையும் மிகவும் எளிதாக வைத்திருப்பார்”
“எனவே எதிரணியில் அவர் இருப்பது எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்குமே தவிர அழுத்தத்தை கொடுக்காது. தனிப்பட்ட முறையில் கடந்த சில வருடங்களாக நான் அவரிடம் சில பாடங்களை கற்றுள்ளேன். எனவே அதை வைத்து நான் ரிலாக்ஸாக விளையாட உள்ளேன். கடந்த 7 அல்லது 8 போட்டிகளிலிருந்தே நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் நாக் அவுட் போட்டியாக நினைத்து விளையாடி வருகிறோம். இந்த போட்டியும் எங்களுக்கு சாதாரணமானது”
இதையும் படிங்க: தோனிக்கு முன்னாடி சிஎஸ்கே கேப்டனாக நான் வரவேண்டியது.. 2008 ஐபிஎல் ஏலத்தின் பின்னணியை பகிர்ந்த சேவாக்
“சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி பெரியது. அதில் குறிப்பிட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் எங்களால் தகுதி பெற முடியும். ஆனால் களத்தில் நீங்கள் அதில் கவனம் செலுத்த முடியாது. உங்களுடைய ஆட்டத்திலும் திறமையிலும் கவனம் செலுத்தி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்” என்று கூறினார். இதற்கிடையே இப்போட்டியில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.