IND vs WI : அபரித வளர்ச்சி, தரவரிசையில் பாபர் அசாமை நெருங்கிய சூரியகுமார் சாதனை – தில்லுமுல்லு எனக்கூறும் பாக் ரசிகர்கள்

Babar Azam Suryakumar Yadhav
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆகஸ்ட் 2-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 73 (50) ரன்கள் குவிக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறிய நிலையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 15 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 (44) ரன்களை 172.73 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார்.

இறுதியில் ரிஷப் பண்ட் 33* (26) ரன்கள் எடுத்ததால் 19 ஓவரில் 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 2 – 1* (5) என்ற கணக்கில் மீண்டும் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ஓபனிங் இடத்தில் களமிறங்க தயாராக இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

அசத்திய ஸ்கை:
அதில் முதல் 2 போட்டிகளில் அவர் தடுமாறியதால் அந்த முடிவை எடுத்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். அந்த நிலைமையில் இப்போட்டியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் அனைத்து இடத்திலும் தம்மால் விளையாட முடியும் என்று நிரூபித்து டிராவிட் மற்றும் ரோகித் மீதான விமர்சனங்களையும் உடைத்தார். அதிலும் பேக்லிப்ட் பந்தை அசால்டாக சிக்சர் அடித்த அவர் பந்திற்கு கீழே வந்து கீப்பருக்கு மேலே பவுண்டரியை பறக்க விட்டதை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அவர் கடந்த 2021இல் அறிமுகமாகி ஒரு வருட காலத்திற்குள் எஞ்சிய அனைத்து இந்திய வீரர்களைக் விட அதிகபட்சமாக 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று புதிய நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பிய போது தனி ஒருவனாக சதமடித்து 117 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடிய அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

அபரித வளர்ச்சி:
இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் சமீப காலங்களில் அபாரமாக செயல்பட்டு 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலிருந்து 816 புள்ளிகளை பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். சொல்லப்போனால் டாப் 10 தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய பேட்ஸ்மேனாகவும் சூர்யகுமார் யாதவ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான போது தரவரிசையில் 1178-வது இடத்தில் இருந்த அவர் தனது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் 5-வது போட்டியில் நேரடியாக டாப் 100 பட்டியலுக்குள் நுழைந்து 77 இடத்தை பிடித்தார்.

10-வது போட்டியில் 60-வது இடத்திற்கு முன்னேறிய அவர் 15-வது போட்டியில் 49வது இடத்திற்கு முன்னேறி 20வது போட்டியில் 4வது இடத்திற்கு முன்னேறினார். அந்த நிலையில் தற்போது 22-வது போட்டியிலேயே 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள அவர் தனது அபார பேட்டிங் திறமையால் அபரித வளர்ச்சி கண்டுள்ளார். மேலும் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முந்துவதற்கு அவருக்கு இன்னும் வெறும் 3 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. அதனால் இத்தொடரின் எஞ்சிய 2 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அவரை முந்தி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வருவதற்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.

பாக் ரசிகர்கள்:
ஆனால் 2021 முதல் 26 இன்னிங்ஸ்சில் பாபர் அசாம் 1005 ரன்களை எடுத்துள்ள நிலையில் அதே காலக்கட்டத்தில் 20 இன்னிங்ஸ்சில் 648 ரன்களை மட்டுமே எடுத்த சூர்யகுமார் யாதவ் எப்படி திடீரென்று 2-வது இடத்திற்கு வந்தார் என தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் இதில் ஐசிசி தில்லுமுல்லு செய்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

அதேபோல் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் தடுமாறிய அவர் ஒரு போட்டியில் அடித்தார் என்பதற்காக முகமத் ரிஸ்வானை முந்தியதையும் நம்ப முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உங்களது வீரர்களைப் போல் எங்களது சூர்யகுமார் யாதவ் ஜிம்பாப்வேக்கு எதிராக ரன்களை அடிக்கவில்லை அதனாலேயே இந்த அபரித வளர்ச்சி கண்டுள்ளார் என்று உருட்டும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Advertisement