வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1 – 1* என்ற கணக்கில் தொடர் சமநிலை அடைந்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் முக்கியமான 3-வது போட்டி செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் இருக்கும் வார்னர் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்கியது. வீரர்களின் லக்கேஜ் வருகையில் ஏற்பட்ட தாமதத்தால் இப்போட்டியும் இரண்டரை மணி நேரம் தாமதமாக துவங்கப்பட்ட நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஆரம்பத்திலேயே நிதானத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் ப்ரெண்டன் கிங்கை 20 (20) ரன்களில் ஹர்திக் பாண்டியா கிளீன் போல்டாக்கினார். அப்போது களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுப்பாக செயல்பட்டு 2-வது விக்கெட்டுக்கு மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட கெய்ல் மேயர்ஸ் உடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தினாலும் கடைசிவரை மெதுவாகவே பேட்டிங் செய்து 22 (23) ரன்களில் அவுட்டானார்.
அசத்திய ஸ்கை:
இருப்பினும் மறுபுறம் 17 ஓவர்கள் வரை நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்து 73 (50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 2 பவுண்டரி 1 சிக்சர் பறக்கவிட்ட ரோவ்மன் போவல் 23 (14) ரன்களிலும் 2 சிக்சரை விளாசிய சிம்ரோன் ஹெட்மையர் 20 (12) ரன்களிலும் கடைசி ஓவரில் ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 164/5 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதைத்தொடர்ந்து 165 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 1 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்ட கேப்டன் ரோகித் சர்மா 11* (5) ரன்கள் எடுத்திருந்த போது முதுகு பிடிப்பு காரணமாக களத்திலிருந்து ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
இதில் ஒருபுறம் பெயருக்காக ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்ய மறுபுறம் சரவெடியாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 11.3 ஓவரில் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் கடைசிவரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 24 (27) ரன்களில் நடையை கட்டினார். ஆனாலும் மறுபுறம் விதவிதமான ஷாட்களை விளையாடி வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் 8 பவுண்டரி 4 சிக்சருடன் அரைசதம் அடித்து 76 (44) ரன்களை 172.73 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
இந்தியா மாஸ்:
அதனால் நல்ல தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா 4 (6) ரன்களில் அவுட்டானாலும் ரிஷப் பண்ட் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (26) ரன்களும் தீபக் ஹூடா 10* (7) ரன்களும் எடுத்து தேவையான பினிஷிங் கொடுத்தனர். அதன் காரணாமாக 19 ஓவரிலேயே 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீசுக்கு கெயில் மேயர்ஸ் தவிர ஏனைய வீரர்களை 30 ரன்களை கூட தாண்ட விடாமல் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசியது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதன்பின் 165 என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தும் போது கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே வெளியேறியதால் ஏற்பட்ட பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் அந்த சரிவை சரிசெய்யும் வகையில் பொறுப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தடுமாறினாலும் இப்போட்டியில் அதிரடியாகவும் அபாரமாகவும் பேட்டிங் செய்து 76 (44) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அதனால் தன்னை தொடக்க வீரராக களமிறக்கிய ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மீதான கடுமையான விமர்சனங்களையும் அவர் தூள் தூளாக்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களின் கையை ஓங்க விடாமல் ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கிய சூரியாவின் அதிரடியான ஆட்டம் ஆமை வேகத்தில் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டத்தையும் மறைத்து ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தது. அதன் காரணமாக இறுதியில் ஹர்திக் பாண்டியா அவுட்டானாலும் ரிஷப் பண்ட் 33*, ஹூடா 10* ரன்கள் எடுத்ததே இந்தியாவின் எளிதான வெற்றிக்கு போதுமானதாக இருந்தது. இந்த அற்புத வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் மீண்டும் இந்தியா முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.



