பிரபலமான சொகுசு காரை வாங்கிய நட்சத்திர இந்திய வீரர் – வியக்க வைக்கும் விலை மற்றும் விவரம் இதோ

Suryakumar yadhav
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து ஏராளமான ரன்களை குவித்த போதிலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறாமல் இருந்து வந்தார். இருப்பினும் திறமையான அவர் ரன்கள் மேல் ரன்கள் அடித்த போதும் தேர்வுக்குழு கண்டுகொள்ளாததால் கடுப்பான ரசிகர்கள் கடந்த சில வருடங்களில் சமூகங்களில் நிறைய கேள்விகளை எழுப்பி வந்தனர். அதனால் ஒரு வழியாக கடந்த 2021இல் இந்திய மண்ணில் நிகழ்ந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் அப்போது முதல் இந்திய வெள்ளைப் பந்து அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக இடத்தை பிடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் 4வது இடத்தில் விளையாடக்கூடிய சரியான வீரர் கிடைக்காததால் 2019 உலக கோப்பையில் இந்தியா தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்த அந்த இடத்தில் ரோகித் சர்மா, ராகுல், விராட் கோலி ஆகியோருக்குப் பின் விளையாட தகுதியானவராக அவர் தன்னை நிரூபித்து வருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவிக்கும் திறமை பெற்றுள்ள இவர் கடந்த மாதம் இங்கிலாந்து மண்ணில் நடந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் தனி ஒருவனாக சதமடித்து 117 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடியது அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றது.

- Advertisement -

நம்பர்-2 பேட்ஸ்மேன்:
பொதுவாக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வீரராக சோதிக்கப்பட்டதில் ஆரம்பத்தில் தடுமாறியதால் அந்த முடிவை எடுத்த ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மா ஆகியோர் கடுமையான விமர்சனத்தை சந்தித்தனர். இருப்பினும் 3வது போட்டியில் அதிரடியாக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றவர் தம்மால் அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்துக் காட்டினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் பந்தாடி வரும் அவர் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய வீரராக உலகின் நம்பர்-2 பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

அதைவிட தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸ் போல எப்பேர்ப்பட்ட பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தில் நாலாபுறமும் சுழன்றடித்து பவுண்டரிகளாக பறக்கவிடும் திறமை பெற்றுள்ள இவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என இந்திய ரசிகர்கள் அழைக்கிறார்கள். அந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் விளையாட தயாராகி வரும் இவர் 30 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட்டை தொடங்கி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அசத்தி வருகிறார்.

- Advertisement -

பென்ஸ் கார்:
பொதுவாக இதுபோன்ற கிரிக்கெட் வீரர்கள் எந்த அளவுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றிகளைத் தேடி கொடுக்கிறார்களோ அந்தளவுக்கு பணமும் புகழும் அவர்களை சேர்ந்து விடுகிறது. அதனால் மிகப் பெரிய பங்களா, கார் போன்றவைகளை அவர்கள் வாங்குவதும் வழக்கமானதாகும். அந்த வகையில் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அதற்கு பரிசாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூர்யகுமார் யாதவ் தற்போது அந்த பணத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார். உலக அளவில் மிகப் பெரிய புகழ்பெற்ற மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி ஜிஎல்எஸ் ஏஎம்ஜி 63 மாடல் காரை தற்போது அவர் வாங்கியுள்ளார்.

சுமார் 2.15 கோடி மதிப்பிலான அந்த பிரீமியம் கார் இந்தியாவில் இன்னும் பொது விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும் ஏற்கனவே அதை பிரத்தியேகமாக ஆர்டர் செய்து வாங்கியுள்ள அவர் தனது மனைவியுடன் இணைந்து ஷோ ரூமில் நேற்று இந்த காரை பெற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் அந்த காருக்கு முன்பாக கிரிக்கெட் பிட்ச் போன்ற அமைப்பை உருவாக்கி அதில் அவருடைய சில போஸ்டர்களையும் வைத்து மனதார பாராட்டி கார் ஷோரூம் நிர்வாகிகள் வாழ்த்தி சாவியை கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கார் பிரியர்களாக இருக்கும் நிலையில் அவரது வரிசையில் இணைந்துள்ள சூர்யகுமார் யாதவ் கடந்த மாதம் தான் 3.64 கோடி மதிப்பிலான போர்சே டர்போ 911 மாடல் சொகுசு காரை வாங்கியிருந்த நிலையில் மீண்டும் அதே விலை மதிப்பிலான காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement