
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததால் இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன்படி அதற்கு அடுத்து நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் சுப்மன் கில் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டு அந்த தொடரில் இந்தியா விளையாடி முடித்தது.
அதன் பின்னர் 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கருத்தில் கொண்டு நிரந்தர கேப்டனை தேர்வு செய்ய நினைத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக தேர்வு செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அவருடைய தனிப்பட்ட சூழ்நிலை கருத்தில் கொண்டு புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் தனக்கு கிடைத்துள்ள கேப்டன்சி குறித்தும் கேப்டன் பணியில் தனக்கு முன்னோடி யார்? என்பது குறித்தும் புதிய கேப்டனான சூரியகுமார் யாதவ் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் அவர் கூறுகையில் : ரோகித் சர்மா தான் எனக்கு தலைவராக இருந்தார். அவரிடம் இருந்து நான் எப்படி கேப்டன்சி செய்வது என்பதை கற்றுக் கொண்டேன்.
என்னுடைய கேப்டன்சி ரோகித் சர்மாவை போன்றே இருக்கும் என நம்புகிறேன். 2014-ல் ஆரம்பித்த என்னுடைய பயணம் தற்போது பத்து வருடங்களில் மிகப்பெரியதாக மாறியுள்ளது. இந்த காலகட்டத்தில் நான் கேப்டன்சி குறித்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.
இதையும் படிங்க : இந்தியா – இலங்கை டி20 தொடர் நடைபெறும்.. பல்லக்கேல் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
ரோகித் சர்மாவிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுகொண்டுள்ளேன். என்னால் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்த முடியும் என்று நினைப்பதாக சூரியகுமார் யாதவ் தெரிவித்தார். எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையானது இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறவிருக்கும் வேளையில் அதுவரை சூரியகுமார் யாதவே கேப்டனாக தொடர்வார் என்பது உறுதி.