இலங்கைக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. பல்லக்கேல் நகரில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 137/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கில் 39, ரியான் பராக் 26, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தனர்.
இலங்கை சார்பில் அதிகபட்சமாக தீக்சனா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 26, குசால் மெண்டிஸ் 43, குசால் பெரேரா 46 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் 117/2 என்ற வலுவான நிலையில் இருந்த இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தொடர்நாயகன் சூரியகுமார்:
ஆனால் அதன் பின் மீண்டும் துல்லியமாக பந்து வீசிய இந்தியா கடைசி 12 பந்துகளில் இலங்கைக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வைத்தது. அதனால் இலங்கையும் 20 ஓவரில் 137/8 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத்தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் சுழலில் இலங்கை 2 விக்கெட்டுகளை இழந்து 2 ரன் மட்டுமே எடுத்தது.
இறுதியில் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி ஓவரில் இலங்கைக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது 6 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த தம்மை விட 30/4 என சரிந்த நேரத்தில் பேட்டிங்கில் இந்தியா போராடி 137 ரன்கள் அடித்ததே வெற்றிக்கு காரணம் என்று கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் தொடர்நாயகன் விருதை வென்ற அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடைசி ஓவரை விட 30/4 என தடுமாறிய போது எங்களுடைய வீரர்கள் போராட்ட குணத்தை காண்பித்தனர். 140 என்பது இந்த பிட்ச்சில் சராசரி ஸ்கோராகும். அதனால் இதயத்திலிருந்து விளையாடினால் நம்மால் விளையாட முடியும் என்று எங்கள் அணியிடம் சொன்னேன்”
இதையும் படிங்க: ஹோம் ஒர்க் பண்ணோம்.. இந்த வாய்ப்பை கொடுத்த அவருக்கு நன்றி சொல்றேன்.. இலங்கை சாய்த்த சுந்தர் பேட்டி
“எங்கள் வீரர்களிடம் உள்ள தன்னம்பிக்கை, திறமை ஆகியவை என்னுடைய வேலையை எளிதாக்கியது. நேர்மறையுடன் எங்கள் வீரர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வது நம்ப முடியாதது. கடந்த போட்டி முடிந்ததும் சில வீரர்களிடம் ஓய்வெடுக்குமாறு சொன்னேன். அதற்கு தயாராக இருந்த அவர்கள் என்னுடைய வேலையை எளிதாக்கினர். இத்தொடர் துவங்குவதற்கு முன்பாக சொன்னது போல நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. அணியின் தலைவராக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.



