இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்தது. அப்போட்டியில் 214 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் 5, துணைக் கேப்டன் சுப்மன் கில் 0 ரன்களில் அவுட்டானது தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணமானது.
குறிப்பாக கடைசியாக விளையாடிய 17 சர்வதேச டி20 போட்டிகளில் சுப்மன் கில் அரை சதம் கூட அடிக்காமல் திணறி வருகிறார். அதே போல கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் யாதவும் பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அந்த வகையில் கேப்டனாக முன்னின்று அசத்த வேண்டிய சூரியகுமார், கில் தடுமாற்றமாக விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்து வருகிறது.
டாஸ் போடுறது வேலையில்லை:
இந்நிலையில் கேப்டனாக இருப்பவர் டாஸ் போடுவதற்கு மட்டும் வந்தால் போதாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். திட்டங்களை வகுப்பது, பவுலர்களை பயன்படுத்துவதைத் தாண்டி கேப்டனாக இருப்பவர் முதலில் ரன்கள் குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நீங்கள் அணியின் கேப்டன். ஆனால் கேப்டனாக டாஸ் வென்று, பவுலர்களை நிர்வகிப்பது மட்டும் உங்களுடைய வேலை கிடையாது. வெற்றிக்கான வியூகங்களை அமைப்பது மட்டும் உங்களது வேலை கிடையாது. ஒருவேளை நீங்கள் டாப் 4 இடங்களில் பேட்டிங் செய்தால் ரன்கள் குவிப்பதே உங்களுடைய முதன்மையான வேலை. ஆனால் அதை நீங்கள் நீண்ட போட்டிகளில் செய்யவில்லை”
சூரியகுமார், கில் அசத்தனும்:
“கடந்த 17 போட்டிகளில் உங்களுடைய பேட்டிங் சராசரி வெறும் 14 மட்டுமே. ஸ்ட்ரைக் ரேட்டும் நன்றாக இல்லை. ஒருமுறை கூட அரை சதமடிக்காத நீங்கள் 2 முறை மட்டுமே 25 ரன்கள் தாண்டியுள்ளீர்கள். இப்படி விளையாடினால் உங்களுடைய நீங்கள் விளையாடும் தேசிய அல்லது ஐபிஎல் அணிக்கு பிரச்சனை மட்டுமே ஏற்படும்”
இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 3வது டி20 நடக்கும் தரம்சாலா மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்
“3 அல்லது 4வது இடத்தில் நீண்ட காலம் விளையாடும் நீங்கள் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தடுமாறினால் உலகக் கோப்பை துவங்கும் போது உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது. எனவே கேப்டன் சூரியகுமார் யாதவ், துணைக் கேப்டன் சுப்மன் கில் ரன்கள் அடிப்பது கட்டாயம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



