இந்தியாவில் விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஏதாவது ஒருநாள் தங்களது நாட்டுக்காக சர்வதேச அரங்கில் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடுவார்கள். அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த சூரியகுமார் யாதவ் உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக உழைத்து வாய்ப்புக்காக காத்திருந்து போராடி போராடி 30 வயதை கடந்த பின் ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமானார். தாமதமாக அறிமுகமானாதால் வாய்ப்புகளின் அருமையை உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை மனிதர் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்டு குறுகிய காலத்திலேயே இன்று டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி தனது லட்சியத்தில் பாதியை எட்டி விட்டார்.

பொதுவாக டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் அவர் எப்போதுமே அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களில் அவுட்டாகி அடுத்த வரும் பேட்ஸ்மேன்களுக்கு பாரமாக அமைந்ததில்லை. அதற்காக அவருடைய அந்த அணுகுமுறை எப்போதும் அவரை கைவிட்டதில்லை. ஏனெனில் பெரும்பாலான போட்டிகளில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதை லாவகமாக மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விடும் அவரது பேட்டிங்கை பார்த்து எதிரணியினர் கூட வியந்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் ஏபிடி:
அதனால் ஆரம்பத்தில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று இந்திய ரசிகர்கள் மட்டும் அழைத்த அவரை உலகிலேயே 360 டிகிரியிலும் முதல் முறையாக சுழன்றடித்து டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய ஏபி டீ வில்லியர்ஸ் தாமாக முன்வந்து தம்மையும் மிஞ்சி விட்டீர்கள் என்று பாராட்டினார். ஏனெனில் உலகிலேயே முதல் முறையாக அவர் தான் எதிரணி எப்படி பந்து வீசினாலும் படுத்துக் கொண்டும் உருண்டும் பிரண்டும் எப்படியாவது பவுண்டரிகளை அடித்து விதவிதமான புதிய ஷாட்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

தற்போது அவரைப்போலவே யாருமே நினைத்து பார்க்க முடியாத அசாத்தியமான ஷாட்டுகளை அசால்டாக அடிக்கும் சூரியகுமார் அடுத்த ஏபிடி என்று கிட்டத்தட்ட அனைவருமே பாராட்ட தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஓய்வு பெற்ற ஏபி டீ வில்லியர்ஸ் இல்லாத குறையை போக்கும் அளவுக்கு சூரியகுமார் செயல்படுவதாக அவரை வளர்த்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் சூர்யாவை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். அதனால் அவர் விளையாடுவதற்கு வர்ணனை செய்யும் அதிர்ஷ்டத்தையும் நான் பெற்றுள்ளேன். அவர் விளையாடும் போது அவருடைய அற்புதமான திறமைகளை நீங்கள் பார்க்க முடியும்”
“அதை விட அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பது பல வழிகளில் ஏபிடி பேட்டிங் செய்வது போலவே உள்ளது.அவரைப் போலவே தகுதியும் திறமைமையும் கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் அவரைப் போலவே சிந்தித்து சரியான நேரத்தில் சரியான ஷாட்டுகளை அடித்து அவரது உச்சத்தை தொடுவதற்கு தொடங்கி விட்டார். ஏபி டீ வில்லியர்ஸ் போல ஒரு வீரர் வளர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போலவே விளையாடும் சூரியகுமார் கொண்டு வரும் எனர்ஜியை பார்ப்பதற்காகவே அனைவரும் டிவியை இயக்குகிறார்கள். இது உற்சாகமானது. அதே சமயம் இது இந்திய கிரிக்கெட்டுக்கு வரப்பிரசாதமானது” என்று கூறினார்.

அதாவது ஏபி டிவில்லியர்ஸ் விளையாடும் போது எப்படி அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் டிவியை போட்டு பார்ப்பார்களோ அதே போல் சூரியகுமார் யாதவ் விளையாடும் போதும் அனைவரும் டிவியை விருப்பத்துடன் போட்டு பார்ப்பதாக கிரேம் ஸ்மித் பாராட்டியுள்ளார். அந்த வகையில் சூரியகுமார் ரூபத்தில் ஏபி டீ வில்லியர்ஸ் விளையாடுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் இதற்காக இந்திய அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று பாராட்டியுள்ளார். முன்னதாக டி20 உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அசத்திய சூரியகுமார் அடுத்ததாக வங்கதேச ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



