- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில்லை பார்த்து எனக்கு பயம் வருவது உண்மையே.. ஆனா அதுக்காக பயப்படல.. சூரியகுமார் ஓப்பன்டாக்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். உண்மையில் ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் ஹர்திக் பாண்டியா டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2024இல் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவரை ஃபிட்டாக இல்லை என்று சொல்லி கழற்றி விட்டு சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்தார்.

கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாற்றமாகவே விளையாடி வருகிறார். இருப்பினும் அவருடைய தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்து வரும் இந்தியா தொடர்ந்து ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக வெற்றிகளைப் பெற்று வருகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவில் டி20 தொடரை வென்ற இந்தியா சமீபத்தில் ஆசியக் கோப்பையை வென்ற சாதனை படைத்தது.

- Advertisement -

சுப்மன் கில் பயம்:

இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு அவரை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. அத்துடன் டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் சூரியகுமாருக்கு பின் இந்தியாவை தலைமைத் தாங்கப்போவது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக 2026 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் சூரியகுமார் கழற்றி விடப்பட்டு கில் இந்தியாவை தலைமைத் தாங்க உள்ளார். இந்நிலையில் சுப்மன் கில் தம்முடைய கேப்டன்ஷிப்பை பறித்து விடுவாரோ என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதற்கு பயப்படாமல் நிகழ்காலத்தில் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் வெளிப்படை:

இது பற்றி சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் 2 ஃபார்மட்டில் கேப்டனாக வந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நன்றாக விளையாடி வருகிறார். அவரால் என்னுடைய கேப்டன்ஷிப் பறிபோகும் என்ற பயம் எனக்கில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அந்த பயம் உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். கில் மற்றும் எனக்கும் இடையேயான தோழமை நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட்டில் இருப்பதிலேயே கஷ்டமான வேலையை செய்றேன்.. ஜெய்க்க வாய்ப்பில்லை.. அகர்கர் ஆதங்கம்

“கில் எப்படிப்பட்ட வீரர் மற்றும் மனிதர் என்பது எனக்குத் தெரியும். ஒருவர் வெளிப்புற விஷயங்களுக்காக பாதிக்கப்பட்டால் அதையே அதிகம் சிந்திப்பார்கள். அவற்றை சிந்தித்தால் நானும் சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் பந்தை எதிர்கொண்டிருக்க மாட்டேன். எனவே நீண்ட காலத்திற்கு முன்பே நான் பயத்தை விட்டு விட்டேன். நாம் கடினமாக உழைத்தால் அனைத்தும் நம்மை நோக்கி வரும் என்பதை நான் நம்புகிறேன். அதன் அடிப்படையில் கடினமாக உழைக்கும் என்னை மற்றவை பார்த்துக் கொள்ளும்”என்று கூறினார்.

- Advertisement -