இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக டி20 உலககோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் பேசிய சூரியகுமார் யாதவ் :
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 89 ரன்களையும், இஷான் கிஷன் 54 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :
உண்மையிலேயே இந்த வெற்றி மிக மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் இதற்காக உழைத்து வருகிறோம். 2024 டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் ஜெய் ஷா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் என்னை நம்பி எனக்கு இந்திய அணியின் கேப்டனாக ஒரு வாய்ப்பினை கொடுத்தனர். அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நான் தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோடி மைதானத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிகரமான கேப்டனாக நிற்கிறேன்.
இதையும் படிங்க : இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் சாம்பியன் பட்டம் யாருக்கு? – ஐ.சி.சி ரூல்ஸ் சொல்வது என்ன?
உண்மையிலேயே இந்த தருணம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர். இப்படி மிக அருமையான வீரர்களை கொண்ட ஒரு அணியை கேப்டனாக வழி நடத்தியதில் மகிழ்ச்சி என சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



