இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்காக தயாராகி வருகிறது. அந்த சுற்றில் ஜூன் 20ஆம் தேதி இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பார்படாஸ் நகரில் சந்திக்கிறது. முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் தடுமாற்றமாக விளையாடி வருகிறார்.
எப்படி போட்டாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கக்கூடிய அவர் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதனால் இத்தொடரில் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10/2 என இந்தியா தடுமாறிய போது 50* (49) ரன்கள் குவித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
வெஸ்ட் இண்டீஸில் அதிரடி:
ஆனால் பொதுவாகவே அடித்து நொறுக்கக்கூடிய அவர் அந்தப் போட்டியில் சவாலான பிட்ச்சில் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடினார். இந்நிலையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நிதானமாக விளையாட வேண்டுமென்ற சவால் தமக்கு இருப்பதாக சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சூப்பர் 8 சுற்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் பற்றி இந்திய அணிக்கு தெரியும் என்று சூரியகுமார் கூறியுள்ளார். எனவே அமெரிக்காவை விட வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிரடியாக விளையாடுவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக 2 வருடங்கள் இருக்கும் போது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாறி அணிக்கு தேவைப்படும் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்”
“அதுவே நல்ல பேட்ஸ்மேனுக்கு அழகு. அதையே நான் முயற்சிக்கிறேன். பிட்ச்சில் வேகம் இல்லாத போது வேகத்தை கொடுத்து அடிப்பது மிகவும் கடினமாகும். அது போன்ற நேரங்களில் நீங்கள் சாதுரியமாக விளையாடி உங்களுடைய இன்னிங்ஸை அதிகரிக்க வேண்டும். நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் மாறி என்ன தேவைப்படுகிறதோ அதை உங்களுடைய பார்ட்னருடன் பேசி உணர்ச்சிகளை குறைத்துக் கொண்டு முன்னோக்கி விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: நீங்க அந்த மாதிரி பிளேயர் கிடையாது.. கோலியை ஃபாலோ பண்ணுங்க.. வில்லியம்சனுக்கு மைக்கேல் வாகன் அறிவுரை
“அமெரிக்காவில் நாங்கள் முதல் முறையாக விளையாடினோம். சூழ்நிலைகளும் அங்கே சவாலாக இருந்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகள் பற்றி எங்களுக்கு தெரியும். அமெரிக்காவில் உலகக் கோப்பை என்று தெரிந்த பின் சூழ்நிலைகளை உருவாக்கினர். ஆனால் இங்கே வழக்கமாக உருவாக்கப்படும் மைதானங்கள் அமெரிக்காவை விட நன்றாக இருக்கும். எனவே இங்கே நான் பயிற்சியில் விளையாடுவதைப் போலவே ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அடிக்க முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.



