தகர டப்பான்னு நினைக்காதீங்க.. ரியான் பராக்கிற்கு ஓவர் கொடுத்தது ஏன்? கேப்டன் சூரியகுமார் விளக்கம்

Suryakumar Yadav 2
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜூலை 27ஆம் தேதி தம்புலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 214 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் சூரியகுமார் 58, ரிஷப் பண்ட் 49 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த இலங்கைக்கு நிசாங்கா 79 குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் 140/1 என்ற வலுவான துவக்கத்தை பெற்ற இலங்கை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் நெருப்பாக பந்து வீசிய இந்தியா அடுத்த 5.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

அசத்திய ரியான் பராக்:
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா சூர்யகுமார் மற்றும் கௌதம் கம்பீர் தலைமையில் தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. முன்னதாக சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான ரியான் பராக் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டார். அதனால் கழற்றி விடப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்தது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் 7 (6) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்த அவருக்கு கேப்டன் சூரியகுமார் பந்து வீச்சில் அதுவும் டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பைக் கச்சிதமாக பயன்படுத்திய ரியான் பராக் 1.2 ஓவரில் 5 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து இலங்கையை விரைவாக ஆல் அவுட் செய்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

இந்நிலையில் ரியான் பராக் பவுலிங்கை ஐபிஎல் தொடரில் பார்த்ததாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் ரசிகர்கள் நினைப்பது போல் அல்லாமல் ரியான் பராக் துருப்புச்சீட்டு வீரர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “இது ரியான் பராக்கின் ஸ்பெஷல் பவுலிங். அவருடைய பந்து வீச்சை இதற்கு முன்பே ஐபிஎல் மற்றும் வலைப்பயிற்சியில் நான் பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க: அப்போவே தயாராக்கிட்டாரு.. என்னோட பவுலிங்க்கு கம்பீர் தான் காரணம்.. பின்னணியை பகிர்ந்த ரியான் பராக்

“செய்தியாளர்கள் சந்திப்பில் கூட ரியான் பராக் துருப்புச்சீட்டு வீரர் என்பதை உங்களிடம் நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். நான் கேப்டனாக இல்லாமல் தலைவராக இருக்க விரும்புகிறேன். இலங்கையில் எங்களுக்கு ஆதரவு கிடைப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் இப்படி எங்களுக்கு ஆதரவை கொடுத்தால் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement