யாருமே வாங்கவில்லை. முடிவுக்கு வந்த சி.எஸ்.கே சிங்கத்தின் சகாப்தம் – ரசிகர்கள் சோகம்

CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்களை ஏலம் பெங்களூருவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. உலகம் முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோரின் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடந்த இந்த ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்றார்கள். இந்த ஏலம் துவங்கியது முதலே நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளிடமும் கடுமையான போட்டி நிலவியது.

ipl

- Advertisement -

குறிப்பாக டேவிட் வார்னர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், குயின்டன் டி காக் போன்ற நட்சத்திரங்கள் முதல் ஆளாக ஏலம் போனார்கள். அதேபோல இஷான் கிசான் போன்ற ஒருசில இளம் வீரர்களும் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

சின்ன தல சுரேஷ் ரெய்னா:
இருப்பினும் இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜாம்பா போன்ற ஒரு சில வெளிநாட்டு நட்சத்திரங்களும் அமித் மிஸ்ரா போன்ற ஒரு சில இந்திய வீரர்களையும் வாங்குவதற்கு எந்த ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு அணியும் முயற்சி கூட செய்யாதது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த சில வருடங்களாகவே மோசமான பார்மல் தவித்து வரும் அவர் அதிகபட்ச விலையாக 2 கோடி ரூபாய் பிரிவின்கீழ் இந்த ஏலத்தில் பங்கேற்றார். அவரை குறைந்தபட்சம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாவது வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

suresh

இருப்பினும் பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் நாள் ஏலத்தில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு அணியும் வாங்கவில்லை. அப்போதே அவர் கடைசி வரை ஏலம் போகமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2வது நாள் ஏலத்தின் இறுதிக்கட்ட பட்டியலிலும் அவரின் பெயர் இடம்பெறவில்லை. இதன் காரணமாக ஐபிஎல் 2022 ஏலத்தில் கடைசி வரை யாருமே சுரேஷ் ரெய்னாவை வாங்காத காரணத்தால் வரும் ஐபிஎல் 2022 தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இது சென்னை மற்றும் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களின் மனதை உடைத்து மிகப்பெரிய சோகத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

யாருமே வாங்கவில்லை:
ஏனென்றால் ஐபிஎல் துவங்கிய 2008 முதல் சென்னை அணிக்காக டாப் ஆர்டரில் பட்டையை கிளப்பிய அவர் எதிரணி பந்து வீச்சாளர்களை பந்தாடி பல இமாலய சிக்சர்களையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்டு சென்னையின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார். இதனால் எம்எஸ் தோனிக்கு பின் சென்னை அணியில் மிகவும் பிரபலமான இவரை “சின்ன தல” என சென்னை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தார்கள். சென்னை அணி தடை செய்யப்பட்ட 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர் மீண்டும் சென்னை அணியில் கடந்த 2018 முதல் 2021 சீசன் வரை விளையாடி வந்தார்.

suresh

அப்படிபட்ட அவர் கடந்த சில வருடங்களாக ரன்கள் குவிக்க முடியாமல் மோசமான பார்மில் திணறி வந்தார். இதன் காரணமாக கடந்த வருடமே சென்னை விளையாடிய நாக் அவுட் சுற்று போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதன்பின் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளிலும் அவர் பங்கேற்காத காரணத்தால் தற்போது அவரை எந்த அணியும் வாங்கவில்லை என்பதால் சுரேஷ் ரெய்னா இப்படி ஒரு மோசமான பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முடிந்த மிஸ்டர் ஐபிஎல் சகாப்தம்:
ஒரு காலத்தில் சுரேஷ் ரெய்னா என்றால் எதிர் அணி பவுலர்கள் பந்து வீசுவதற்கே பயப்படுவார்கள். அந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து பல சாதனைகளை படைத்து வந்த அவரை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் மிஸ்டர் ஐபிஎல் என மனதார அழைத்து வந்தார்கள். குறிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த பிளே ஆப் போட்டியில் வெறும் 25 பந்துகளில் 87 ரன்கள் விளாசிய அவரின் இன்னிங்சை ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

Suresh raina

மொத்தத்தில் ஒரு காலத்தில் மிஸ்டர் ஐபிஎல் என்ற பெயருடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜாவாக இருந்த சுரேஷ் ரெய்னா இன்று எந்த ஒரு அணியாலும் ஏலத்தில் வாங்கபடாமல் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக கழற்றி விடப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை அவர் 200 இன்னிங்ஸ்களில் விளையாடி 5528 ரன்களை 32.52 என்ற சிறப்பான சராசரியில் 136.73 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் 1 சத்தமும் 39 அரை சதங்களும் 506 பவுண்டரிகளும் 203 சிக்ஸர்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement