தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த தொடரில் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாக சொந்த மண்ணில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
3 ஆம் இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு குடுங்க : சுரேஷ் ரெய்னா
இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் மூன்றாவது இடத்தில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடிய போதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் எட்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு சாய் சுதர்சன் அவருக்கு பதிலாக விளையாடி வருகிறார்.
சத்தீஸ்வர் புஜாரா இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு பல்வேறு வீரர்கள் மூன்றாம் இடத்தில் விளையாடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் எந்த ஒரு வீரரும் இன்னும் அந்த இடத்தை நிரந்தரமாக பிடிக்கவில்லை. அதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தில் விளையாடுவதற்கு தகுதியான வீரர் யார்? என்ற விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்திய டெஸ்ட் அணியை பொறுத்தவரை மூன்றாம் இடத்தில் பல்வேறு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தாலும் திறமையான சில வீரர்களை அந்த இடத்தில் பரிசோதிக்கலாம் என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை டாப் ஆர்டரில் புஜாரா, விராத் கோலி போன்ற ஒரு தரமான வீரர் தேவை. எனவே அந்த இடத்தில் சஞ்சு சாம்சனை நாம் முயற்சி செய்து பார்க்கலாம். ஏனெனில் சஞ்சு சாம்சனிடம் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறன் இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு அவரால் நிலைத்து நின்று விளையாட முடியும்.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் 4 ஆவது அதிவேக இந்திய வீரராக ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
டாப் ஆர்டரில் கே.எல் ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சஞ்சு சாம்சன் இருந்தால் நிச்சயம் அது மிகப் பெரியளவில் இந்திய அணிக்கு கை கொடுக்கும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இந்திய அணிக்காக சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சாம்சன் விளையாடி இருந்தாலும் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



