ஐபிஎல் புறக்கணிப்பால் முக்கிய முடிவை எடுத்த சுரேஷ் ரெய்னா – ரசிகர்கள் சோகத்துடன் மகிழ்ச்சி, முழுவிவரம் இதோ

Raina
Advertisement

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2005இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி நிறைய சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியா சரிந்த எத்தனையோ போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கி தாங்கிப்பிடித்த அவர் இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். குறிப்பாக 2011 உலக கோப்பையில் காலிறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் அவர் எடுத்த கணிசமான ரன்கள் தான் வெற்றிக்கு முக்கிய காரணமென்று அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் நிறைய தருணங்களில் பாராட்டியுள்ளார்.

Raina

அந்தளவுக்கு கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பது போல் இந்தியாவுக்காக மொத்தம் 322 போட்டிகளில் 7988 ரன்களை எடுத்துள்ள இவர் 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். இருப்பினும் 2015 உலகக்கோப்பைக்கு பின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறியதால் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் கடைசியாக கடந்த 2018இல் விளையாடியிருந்தார்.

- Advertisement -

ஐபிஎல் புறக்கணிப்பு:
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் தனது அதிரடி சரவெடியான பேட்டிங்கால் எதிரணிகளை பந்தாடிய அவர் அந்த அணிக்கு பல சரித்திர சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்று கொடுத்ததால் வல்லுநர்கள் “மிஸ்டர் ஐபிஎல்” என்று போற்றுகிறார்கள். மேலும் கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக அபாரமாக செயல்பட்ட அவரை தமிழக மக்களும் ரசிகர்களும் “சின்னத்தல” என்று கொண்டாடிய நிலையில் இந்திய கேரியரை போலவே ஐபிஎல் தொடரிலும் 2018க்குப்பின் பார்மை இழந்து தடுமாறினார்.

raina

ஆனால் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நன்றியை மறந்த சென்னை நிர்வாகம் 2021 சீசனில் சுமாராக செயல்பட்ட அவரை அத்தோடு கழற்றி விட்டு அடுத்த வருடம் தக்கவைக்காமல் ஏலத்திலும் வாங்காமல் மொத்தமாக டாட்டா காட்டியது. இதற்கிடையே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் தனது மானசீக நண்பரான தோனி 2020 சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது தாமும் நட்புக்கு இலக்கணமாக 33 வயதிலேயே திடீரென ஓய்வு அறிவித்தார்.

- Advertisement -

தோனியுடன் இணைந்து தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடலாம் என்ற எண்ணத்தில் அந்த முடிவை எடுத்து அவருக்கு அடுத்த வருடமே சுமாரான பார்மில் தவித்தபோது ஆதரவு கொடுக்காமல் தோனியும் சென்னை நிர்வாகமும் நடந்து கொண்டது நிறைய ரசிகர்களை இப்போதும் கொந்தளிக்க வைக்கிறது. அவரை கழற்றிவிட்டதன் பயனாக அவரில்லாத 2020, 2022 சீசன்களில் சென்னை ப்ளே ஆப் சுற்றுடன் வெளியேறியது. மறுபூறம் நிதர்சனத்தை புரிந்துகொண்டு வர்ணனையாளராக மாறி சென்னைக்கு விசில் போட்டு ஆதரவு கொடுத்த அவர் சமீபத்தில் சென்னை அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு பயிற்சி செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

மொத்தமாக ஓய்வு:
அப்போதே விரைவில் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் புதிதாக நடைபெறும் டி20 தொடரில் விளையாடுவதற்காகத் தான் சுரேஷ் ரெய்னா பயிற்சியை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அதை சுரேஷ் ரெய்னாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதற்கு இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலும் விளையாடமல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை பிசிசிஐ வைத்துள்ளது.

- Advertisement -

ஆனால் அந்த 3 இடங்களிலுமே புறக்கணிக்கப்பட்டதால் தமக்கு பிடித்த கிரிக்கெட்டில் விளையாட வேறு வழி தெரியாத சுரேஷ் ரெய்னா ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது உள்ளூர் மற்றும் ஐபிஎல் உட்பட ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளது பின்வருமாறு.

“எனது நாட்டுக்கும் மாநிலத்துக்கும் விளையாடியது மிகப்பெரிய கௌரவமாகும். இந்த தருணத்தில் நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். மேலும் நான் பிசிசிஐ, உத்தரபிரதேச வாரியம், சென்னை நிர்வாகம், ராஜீவ் சுக்லா ஆகியோருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் என் திறமை மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்காகவும் ஐபிஎல் தொடரிலும் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜாம்பவானாக கருதப்படும் சுரேஷ் ரெய்னாவின் கேரியர் வழியனுப்பும் விழா இல்லாமல் இப்படி முடிந்துள்ளது நிறைய ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இருப்பினும் விரைவில் ஏதேனும் ஒரு டி20 தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாடப் போகிறார் என்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

Advertisement