இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கிரிக்கெட் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அதே போல இம்முறையும் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
சொல்லப்போனால் சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இம்முறை ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
பும்ரா அடுத்த கேப்டன்:
ஏனெனில் தம்முடைய சொந்த காரணங்களுக்காக அவர் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலை வந்தால் துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவை வழி நடத்துவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோகித்துக்குப் பின் புதிய நிரந்தர கேப்டனாக பும்ரா உருவெடுப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
எனவே ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் வாய்ப்பில் வெற்றிகளை பதிவு செய்தால் பும்ரா தான் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் என்றும் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பும்ராவுக்கு இது புதிய வாய்ப்பு. கிரிக்கெட்டைப் பற்றிய நல்ல மூளையைக் கொண்டுள்ள அவர் நல்ல கேப்டனாக இருப்பார்”
ரெய்னா நம்பிக்கை:
“ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக இருப்பதற்கு சரியானவர் என்று கௌதம் கம்பீர் பாய் கூட செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக கேப்டனாகவும் வீரராகவும் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை வென்றார். அதே போல பும்ரா இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே இது அவருக்கு அற்புதமான வாய்ப்பு என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: எங்க நாட்டுக்கு வரலைனா பாகிஸ்தான் மொத்தமா செஞ்சுடும்.. இந்தியாவுக்கு ரசித் லதீப் எச்சரிக்கை
“ஒருவேளை இந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டால் அவர் தான் இந்தியாவின் வருங்கால டெஸ்ட் அணியின் கேப்டன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ரோகித் சர்மா இன்னும் ஒரு வருடத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவருக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்துவதற்கு கமின்ஸ் போல பும்ரா சிறந்த தேர்வாக இருப்பார் என்று சொன்னால் மிகையாகாது.