
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. குறிப்பாக மே 25ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. இருப்பினும் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை மோசமான சாதனை படைத்தது.
இது போக சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி போன்ற அணிகளுக்கு எதிராக பல வருடங்கள் கழித்து சிஎஸ்கே முதல் முறையாக தோற்றது. அத்துடன் 200 ரன்களை அசால்டாக அடித்து வெற்றிகளைப் பெறுவதற்கு பெயர் போன சென்னை இம்முறை 180+ ரன்களை சேசிங் செய்வதற்கே திண்டாடியது. அது போக பவர் பிளே ஓவர்களில் 50 ரன்கள் தாண்டுவதற்கே சிஎஸ்கே திணறியது.
அதனால் எதிரணி ரசிகர்கள் சிஎஸ்கே அணியை சமூக வலைதளங்களில் தாறுமாறாக கிண்டலடித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் புறாக்கள் எப்போதும் கழுகு ஆகாது என்று சிஎஸ்கே அணி மீதான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு சின்னத் தல சுரேஷ் ரெய்னா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி நேற்றைய குஜராத்துக்கு எதிரான போட்டியில் அவர் நேரலையில் பேசியது பின்வருமாறு.
“கழுகுகள் 4 நாட்கள் பறக்கா விட்டால், அதற்காக மொத்த வானமும் புறாக்களுக்கு சொந்தமாகி விடாது” என்று தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போக அடுத்த வருடம் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வரவிருப்பதாகவும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது பற்றி நேரலை வர்ணனையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேட்டது பின்வருமாறு.
“அடுத்த வருடம் வரவிருக்கும் சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளரின் பெயர் “எஸ்” என்ற எழுத்தில் துவங்குமா?” என்று கேட்டார். அதற்கு “புதிய பேட்டிங் பயிற்சியாளர் வரவிருப்பவர் சிஎஸ்கே அணிக்காக வேகமான அரை சதத்தை அடித்தவர்” என்று ஹிண்ட் கொடுத்து சிரித்தார். அதைக் கேட்ட ஆகாஷ் சோப்ரா “அப்படியானால் இது உறுதி. ரசிகர்களே நீங்கள் இங்கே தான் இந்த செய்தியை முதலாவதாக கேட்டுள்ளீர்கள்” என்று சொன்னார்.
இதையும் படிங்க: 110 ரன்ஸ்.. கொல்கத்தாவை ஓடவிட்ட ஹைதராபாத்.. மும்பையை முந்தி மிகப்பெரிய சாதனை வெற்றி
அந்த உரையாடலில் எஸ் என்பது சுரேஷ் ரெய்னா என்பவர் என்பதை அனைவரும் அறிவோம். அவர் 2014 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக சிஎஸ்கே அணிக்காக 16 பந்துகளில் வேகமான அரை சதத்தை அடித்து சாதனை படைத்தவர். இதிலிருந்து அடுத்த வருடம் சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக ரெய்னா வருவார் என்ற நம்பிக்கையுடன் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.