இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இலங்கை மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் டி20 தொடரில் சூரியகுமார் தலைமையில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற தரமான வீரர்களை கொண்டிருந்த இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கியது.
அப்படியிருந்தும் இலங்கையிடம் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஒரு மாதமாக ஓய்வெடுத்து வரும் இந்திய அணியினர் அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது.
எச்சரித்த ரெய்னா, ஹர்பஜன்:
இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் வரலாறு படைத்தது. எனவே அடுத்த மாதம் நடைபெறும் தொடரில் வங்கதேசத்தை குறைத்து மதிப்பிடாமல் இந்திய அணியினர் தயாராக வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டிகளுக்கான அணி தற்போது உருவாக்கப்படும். நமது டாப் வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளது பிசிசிஐ எடுத்த நல்ல முடிவு. அதில் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வரும். வங்கதேசத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நல்ல ஸ்பின் பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ள அவர்களிடம் நீண்ட காலமாக விளையாடும் சில தரமான வீரர்கள் உள்ளனர்”
சவாலை கொடுக்குமா வங்கதேசம்:
“எனவே வங்கதேச தொடர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு தயாராக நல்ல பயிற்சியாகவும் இருக்கும்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங் பேசியது பின்வருமாறு. “அது நல்ல தொடராக இருக்கும். இந்திய அணியிடம் நிறைய திறமை இருக்கிறது. இருப்பினும் வங்கதேசத்தை நாம் எளிதாக தாண்டி செல்ல முடியாது. அவர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளனர்”
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இந்தியா வந்துடக்கூடாது.. இங்க நிலைமையே வேற அதை மறந்துடுவாங்க.. கனேரியா பேட்டி
“சில நேரங்களில் அப்படி சிறிய அணிகள் நன்றாக விளையாடி பெரிய அணிகளை தோற்கடித்து விடும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் வங்கதேச தொடருக்கு முன்பாக 2024 துலீப் கோப்பை நடைபெற உள்ளது. அதில் ரோகித், பும்ரா, விராட் கோலி தவிர்த்து மற்ற இந்திய வீரர்கள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.



