
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. அதற்காக அமெரிக்காவுக்கு பயணித்துள்ள இந்தியா ஜூன் ஒன்றாம் தேதி வங்கதேசத்துக்கு பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக தேர்வானார்கள்.
அதில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024 தொடரில் மும்பை அணியின் கேப்டனாக மிகவும் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்தார். குறிப்பாக பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே போல சிஎஸ்கே அணியில் சிவம் துபே பந்து வீசவில்லை என்றாலும் லீக் சுற்று வரை பேட்டிங்கில் அற்புதமாக விளையாடினார்.
ரெய்னா நம்பிக்கை:
ஆனால் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் தேர்வானதும் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டான அவர் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 7 (15) ரன்கள் மட்டுமே எடுத்து சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்த வகையில் சுமாரான ஃபார்மில் அவர்கள் இருவரும் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் ரசிகர்களுக்கு கவலையாகவும் இருக்கிறது. இந்நிலையில் சிவம் துபே இந்த உலகக் கோப்பையின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மிடில் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விடும் திறமையை கொண்டுள்ள சிவம் துபே தேவைப்பட்டால் பந்து வீசுவார் என்று ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். பெரிய சிக்சர்களை அடிக்கும் போது திடமாக நிற்கும் திறமை மிகவும் அரிதானதாகும்”
“சிவம் துபே இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கான துருப்புச் சீட்டாக நிற்பார். எனவே விராட் கோலி துவக்க வீரராக களமிறங்க வேண்டுமா என்பதைப் பற்றிய முடிவை ரோகித் சர்மா எடுப்பார். அதே சமயம் ஜெயஸ்வால் வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார். ஒருவேளை சூழ்நிலை உருவானால் சிவம் துபே இந்தியாவுக்காக பந்து வீசவும் தயாராக இருப்பார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இங்கிலாந்து மறுபடியும் டி20 உ.கோ ஜெயிச்சா அதுக்கு இந்தியா தான் காரணம் இருக்கும்.. நாசர் ஹுசைன்
அவர் கூறுவது போல இந்த வருடம் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்டாலும் கடந்த வருடம் சிஎஸ்கே 5வது கோப்பையை வெல்ல சிவம் துபே முக்கிய காரணமாக அமைந்தார். அத்துடன் 2024 சீசனில் ஒரு ஓவர் வீசிய அவர் 1 விக்கெட்டையும் எடுத்தார். எனவே இந்தியாவுக்காக அவர் இம்முறை பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்துவார் என்று நம்பலாம்.