
ஐபிஎல் 2024 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெங்களூரு அணிக்காக 741 ரன்கள் அடித்தார். அதனால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றார். இருப்பினும் அத்தொடரில் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியதால் விமர்சனங்கள் இருந்தன.
குறிப்பாக ஹைதெராபாத்துக்கு எதிரான போட்டியில் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி கடைசியில் 118 ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது “இது போன்ற ஆட்டத்தை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள்” என்று அவரை சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். அதற்கடுத்த போட்டியிலேயே அதிரடியாக விளையாடிய விராட் கோலி நான் யாருக்காகவும் விளையாடவில்லை அணிக்காகவும் ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறேன் என்று பதிலடி கொடுத்தார்.
கவாஸ்கர் ஆசை:
அப்போது வெளிப்புற விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை என்று சொல்லக்கூடிய விராட் கோலி இப்படி பதிலடி கொடுப்பது ஏன்? என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு விராட் கோலி ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வகையில் 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் பதிலடி கொடுத்துக் கொண்டது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் இந்த வருடத்தின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக கருதப்படும் காபா மைதானத்தில் விராட் கோலி சதமடிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே மெல்போர்ன், அடிலெய்ட், பெர்த், சிட்னி ஆகிய ஆஸ்திரேலியாவின் மைதானங்களில் விராட் கோலி டெஸ்ட் சதமடித்துள்ளார். எனவே பிரிஸ்பேனில் உள்ள காபாவில் சதமடித்தால் ஆஸ்திரேலியாவின் அனைத்து மைதானங்களிலும் சதமடித்த வெளிநாட்டு வீரர் என்ற சுனில் கவாஸ்கர், அல்ஸ்டர் குக் ஆகியோரின் தனித்துவ சாதனையை விராட் கோலி சமன் செய்வார். அதை இம்முறை அவர் செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : விராட் கோலி கிடையாது.. ஆனா பும்ரா தான் அந்த சாதனை படைப்பாரு.. பாண்டிங் கணிப்பு
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் என்னுடைய தனிப்பட்ட ஆசை என்னவெனில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மைதானங்களிலும் சதமடித்த 3வது வெளிநாட்டு வீரராக விராட் கோலி வரவேண்டும் என்பதாகும். காபாவில் அவர் சதமடிக்கவில்லை என்று நினைக்கிறேன். எனவே காபாவில் சதமடிக்கும் பட்சத்தில் அவர் அலெஸ்டர் குக் மற்றும் என்னுடன் இணைந்து கொள்வார்” என்று கூறினார்.