
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின் தங்கியிருந்தது. அதன் காரணமாக ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்கியது.
அப்படி நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஏனெனில் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டியிகளிலிருந்து ஓய்வை அறிவித்தனர். இதனால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இங்கிலாந்து சென்று விளையாடிய வேளையில் இந்த தொடரை இழக்காமல் சமன் செய்தது பாராட்டுக்களை பெற்றுள்ளது.
கேப்டனாக தனது முதல் தொடரிலேயே சவாலான இங்கிலாந்து மண்ணில் மிகச் சிறப்பான வெளிப்படுத்திய சுப்மன் கில் 10 இன்னிங்ஸ்களில் 75 ரன்கள் சராசரியுடன் 754 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்கள் அடங்கும். இந்த தொடரில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டனாகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சுப்மன் கில்லை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் மாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இனிவரும் ஒருநாள் தொடர்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட தயாராக இருந்தாலும் தேர்வுக்குழு இப்போதைக்கு அவர்கள் விடயத்தில் பெரிய கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இருந்தாலும் அதனை சார்ந்த விஷயங்கள் அனைத்தும் தேர்வுக்குழுவினரை பொறுத்தது.
இதையும் படிங்க : 5 ஆவது போட்டியில் பெற்ற வெற்றி.. முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் நடந்த சாதனை – விவரம் இதோ
எனவே தற்போதுள்ள இந்திய ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில்லை கேப்டனாக கொண்டு வரலாம். ஏனெனில் தற்போது இந்திய அணியில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக கில் இருக்கிறார். எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் கொண்டு வந்தால் நிச்சயம் அது அணிக்கு நல்லது என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.