நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. முன்னதாக அந்தப் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்து குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.
அதற்கு சர்பராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினர். குறிப்பாக சர்பராஸ்கான் தனது முதல் சதத்தை அடித்து இந்தியாவை காப்பாற்றினார். மறுபுறம் முழங்காலில் சந்தித்த காயத்தையும் தாண்டி அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதத்தை நழுவ விட்டாலும் இந்தியாவின் இன்னிங்ஸ் தோல்வியை உடைத்தெறிந்தார்.
நிரூபித்த சர்பராஸ்:
முன்னதாக சர்பராஸ் கான் கொஞ்சம் குண்டாக இருப்பதால் 2022லயே பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டது. இந்நிலையில் சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு ஃபிட்னஸ் முக்கியம் இல்லையென்று நிரூபித்து பிசிசிஐ முகத்தில் கரியை பூசியுள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே யோயோ டெஸ்ட்டை குப்பையில் போட்டு விட்டு திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு அவர் பிசிசிஐயை விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.”உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய சதங்கள் அடித்தும் இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு வருட கணக்கில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு தேவையான மெலிதான இடுப்பு அவருக்கு இல்லை என்று அவர்கள் நம்பியதே இதற்கு காரணம். ஆனால் களத்தில் சர்பராஸ் பேட்டிங் அவருடைய இடுப்பை விட அபாரமாக இருந்தது”
யோயோ டெஸ்ட்:
“துரதிஷ்டவசமாக இந்திய கிரிக்கெட்டில் பல முடிவெடுக்கும் யோசனைகள் உள்ளன. அவைகளை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இந்த ஃபிட்னஸ் தூய்மைவாதிகள் விரும்பும் மெல்லிய இடுப்பை கொண்டிருக்காத மற்றொரு வீரர் ரிஷப் பண்ட். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். இதற்கிடையே அவர் நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது”
இதையும் படிங்க: ஏற்கனவே 4 பேர் இருக்கும் வேளையில் 5 ஆவது ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட – என்ன காரணம்?
“அதற்கு 6 மணி நேரம் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல் பந்துகளை சேகரிக்க ஸ்டம்ப்புகளுக்கு ஓடுவதும் தேவைப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும். ஒரு வீரர் நாள் முழுவதும் பேட் செய்யவோ அல்லது 20 ஓவர்கள் வீசவோ முடிந்தால் அவரது இடுப்பு எவ்வளவு மெலிதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பது அர்த்தம்” என்று கூறினார்.



