2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக உலகின் நம்பர் ஒன் அணியாக விளங்கிய நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் அடுத்தடுத்த போட்டிகளில் வென்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் எதிரணி யாராக இருந்தாலும் சொந்த மண்ணில் நாங்கள் தான் கில்லி என்பதை நிரூபித்து வரும் இந்தியா 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போடுவதுடன் சுப்மன் கில், முகமது சிராஜ் போன்ற தரமான இளம் வீரர்களையும் கண்டறிந்து வருகிறது.
குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாத குறை தெரியாத அளவுக்கு இளம் வீரர்கள் அசத்துவதால் 2011க்குப்பின் சொந்த மண்ணில் உலகக் கோப்பை வென்று 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மேலும் தற்போதைய நிலைமையில் சுப்மன் கில், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக உலகக் கோப்பை அணியில் தேர்வாகும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கவாஸ்கர் கோரிக்கை:
இந்நிலையில் 2023 உலக கோப்பை அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை இந்திய ஊடகங்கள் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களிடம் தயவு செய்து கேட்க வேண்டாம் என முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் தங்களது நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும் அவர்கள் கடந்த முறை ஓரிரு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை பரிந்துரை செய்ததை இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் கேட்டு தேர்வு செய்வது இறுதியில் தோல்வியை கொடுத்தாக அவர் எச்சரித்துள்ளார்.
Ambati Rayudu Appreciation Tweet 💛❤️💛#CSKvMI #CSK #Shankar
I hope at least now MSK Prasad Regrets 😒 for picking up Vijay Shankar ahead of #rayudu
In Search Of . U Lost The Real
Gold🪙 Diamond💎 pic.twitter.com/Ub5XcFWSll— 👑 Prince👑 (@TheLolnayak) May 1, 2021
குறிப்பாக 2019 உலக கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி காத்திருந்த அம்பாத்தி ராயுடுவுக்கு பதில் சில வெளிநாட்டு வர்ணையாளர்களின் பேச்சைக் கேட்டு 2019 ஐபிஎல் தொடரில் 244 ரன்கள் மற்றும் 1 விக்கெட் மட்டுமே எடுத்திருந்த விஜய் சங்கரை தேர்வு செய்தது வெற்றியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த நிகழ்வை பெயர் குறிப்பிடாமல் அந்த வெளிநாட்டு வர்ணையாளர்கள் பெயரையும் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர் இது பற்றி பிரபல இணையத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது பின்வருமாறு.
“இம்முறை நமது ஊடகங்கள் வெளிநாட்டு வர்ணையாளர்களிடம் சென்று இந்திய அணியில் யார் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த வர்ணனையாளர்கள் தங்களது நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஆனால் இந்தியா என்று வரும் போது தேவையில்லாத வீரர்களை அவர்கள் பரிந்துரைப்பார்கள். குறிப்பாக கடந்த உலக கோப்பையில் ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் மட்டும் அசத்திய ஒரு புதிய வீரர் அதற்கு முன்பு தொடர்ச்சியாக அசத்தலாக செயல்பட்டு தன்னை நிரூபித்திருந்த ஒரு தரமான வீரருக்கு பதிலாக கடைசி நேரத்தில் தேர்வு செய்யப்பட்டதை நாம் பார்த்தோம். ஆனால் கடைசியில் அந்த வீரர் விளையாடும் 11 பேர் அணியில் கூட தொடர்ந்து இடம் பெறவில்லை”
இதையும் படிங்க: IND vs NZ : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா?
“இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருப்பதால் இளம் வீரர்கள் விளையாடுவதை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அதே சமயம் இந்தியாவுக்காக எந்தெந்த வீரர்கள் விளையாட வேண்டும் என்பதை வெளிநாட்டவர்களிடம் நாம் கேட்கக்கூடாது. குறிப்பாக இந்திய ரசிகர்கள் அதை வெளிநாட்டவர்களிடம் கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் கடைசியில் அது நமது அணி மீது நகைச்சுவை ஏற்படுத்தியதைப் போன்ற நிலைமையை உருவாக்கி விடும்” என்று கூறினார்.