
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகிய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்து தனது வருகையை மிரட்டலாக அறிவித்திருந்தார். தனது முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் அவர் ஆட்டமிழந்து இருந்தாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் உலகையே மிரள விட்டார் என்று கூறலாம்.
ஏனெனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது 35 பந்துகளில் சதமடித்த அவர் அந்த இன்னிங்ஸில் 38 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன் குவித்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்பது மட்டுமின்றி கிரிஸ் கெயிலுக்கு அடுத்து அதிவேகமாக ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார்.
இப்படி 14 வயதுடைய ஒரு வீரர் சர்வதேச பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடுவது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று விட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இவர் குறித்தான பேச்சுகள் தான் நிலவி வந்தன. இந்நிலையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் மீண்டும் டக் அவுட்டாகி இருப்பது தற்போது பேசிபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் வைபவ் சூரியவன்ஷி மிகவும் இளம் வயது வீரர் என்பதனால் அவரை அவருடைய மகிழ்ச்சிக்கு விளையாட விடுங்கள் என்றும் அவர் மீது அழுத்தத்தை திணிக்க வேண்டாம் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதே வைபவ் சூர்யவன்ஷியை யாரும் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம். ஏனெனில் நீங்கள் கொண்டாடினால் அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம்.
ஏற்கனவே ஐபிஎல் ஏலத்தில் நுழைந்த போதே அவர் தனது திறமையை நிரூபித்து விட்டார். அதுமட்டுமின்றி 13 வயதிலேயே ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக அவர் சதமும் அடித்திருந்தார் அதுவே அவருடைய திறமைக்கு சான்றாக அமைந்தது. தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடி வரும் அவர் தனக்கு அருகில் சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிடமிருந்து இன்னும் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டு வருகிறார்.
ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான் வீரருக்கு அருகில் அமர்ந்து போட்டியை எவ்வாறு அணுக வேண்டும் என்பது போன்ற நுட்பங்களை அவர் இனி படிப்படியாக கற்றுக் கொள்வார். தற்போது மிக இளம் வயது வீரராக இருக்கும் அவரை இப்போதே மிகப்பெரிய வீரராக நினைத்து அவரை நாம் கொண்டாடினால் அது தேவையற்ற அழுத்தத்தை அவருக்கு தரும்.
இதையும் படிங்க : ஏற்கனவே அந்த டீம் இருக்குற நிலைமைல இதுவேறயா? ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்
அதன்பின்னர் அவர் தான் நினைத்தபடி விளையாட முடியவில்லை என்றால் கவலைப்பட தொடங்கி விடுவார் எனவே அவரை இயல்பான ஆட்டத்தை விளையாட விடுங்கள் அவரைப் பற்றி ஆஹா ஒஹோ என்ற கொண்டாட்டங்கள் வேண்டாம் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.