இந்த மாதிரி கண்டிஷன்ல பேட்டிங் பண்றவங்க தான் உண்மையான பேட்ஸ்மேன் – சுனில் கவாஸ்கர் அதிரடி

Gavaskar

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களிலேயே முடிவடைந்தது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது.

ind

இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் 11 விக்கெட்டுகளையும், அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதுதவிர இங்கிலாந்து அணி சார்பாக கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தனர். இந்த போட்டியில் இரண்டு நாட்களில் விழுந்த மொத்தம் 30 விக்கெட்களில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்களால் வீழ்த்தப்பட்டவை.

இந்த போட்டியில் மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது என்றும் இதனால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட முடியவில்லை என்றும் இங்கிலாந்து வீரர்கள் குறை கூறி இருந்தனர். ஆனால் இந்த மைதானத்திலும் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து 66 ரன்களையும், இரண்டாவது இனிங்ஸில் ஆட்டமிழக்காமல் 25 ரன்களையும் குவித்து இருந்தார்.

Rohith

அவரது இந்த சிறப்பான செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது என்றே கூற வேண்டும். மேலும் இந்த போட்டி முடிந்த பின்னர் ஆடுகளத்தை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் விதமாக ரோஹித் கூறியதாவது : இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய முடியும். இது நல்ல டர்னிங் பிட்ச் இந்த மைதானத்தில் கவனமாக பேட்டிங் செய்தால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இது மாதிரியான பிட்ச்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது : இதுபோன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பிட்ச்களில் பேட்ஸ்மேன்கள் கிரீஸ்சை நன்றாக பயன்படுத்த வேண்டும். இங்குதான் உங்களது கால் நகர்வுகள் பரிசோதிக்கப்படும். பந்து வேகத்திற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும்.

Rohith 1

அதேவேளையில் ஸ்பின்னுக்கு உதவுமாறு இருக்கும் களங்களில் பேட்டிங் செய்வதற்கு துணிச்சல் வேண்டும். பந்து நன்றாக திரும்பக் கூடிய வகையில் ஆடுகளங்கள் இருந்தால் பேட்ஸ்மேன்களின் உண்மையான திறமை பரிசோதிக்கப்படும். எனவே இதுபோன்ற பந்து திரும்பும் ஆடுகளங்களில் நிறைய ஸ்கோர் செய்யும் பேட்ஸ்மேன்கள் தான் உண்மையான பேட்ஸ்மென்கள் என கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.