இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அண்மையில் விராத் கோலியுடன் நடராஜனை ஒப்பிட்டு ஒரு கருத்தினை வெளியிட்டு பி.சி.சி.ஐ யின் விதிமுறைக்கு எதிராக அவர் குரல் கொடுத்திருந்தார். ஏனெனில் ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்றின் போது நடராஜனுக்கு குழந்தை பிறந்தது இருந்தாலும் அவர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதால் நேராக துபாயில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடிய நடராஜன் டெஸ்ட் போட்டியில் நெட் பவுலராக செயல்படுவதால் அங்கேயே தங்க வைக்கப்பட்டார்.
2 வடிவ கிரிக்கெட்டிலும் அசத்திய நடராஜன் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை என்றாலும், நெட் பவுலராக அங்கேயே தங்க வைக்கப்பட்டார் என்றும் ஆனால் கேப்டனாக இருக்கும் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நேரடியாக இந்தியா திரும்பி தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை பார்க்க கிளம்புகிறார் என்றும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பலரும் தங்களது பதில்களை அளித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழக வீரருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் மீண்டும் ஒரு கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 350க்கும் மேல் வீழ்த்திய ஒரு பந்து வீச்சாளரை எந்த அணியும் இழக்க நினைக்காது. ஆனால் இந்திய அணியில் அஸ்வின் அப்படி அல்ல. ஒரு போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால் கூட உடனே அடுத்த போட்டியில் அவரை ஓரம் கட்டி விடுகின்றனர். அவருக்கு இந்திய அணியில் கிடைக்கும் மரியாதை நியாயம் கிடையாது. ஒரு சிறந்த பேட்ஸ்மேன் சொதப்பினால் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் அஸ்வின் ஒரு போட்டியில் சொதப்பினால் கூட அவரை வெளியேற்றி விடுகின்றனர். அஸ்வினுக்கு ஒரு விதிமுறை மற்ற வீரர்களுக்கு ஒரு விதிமுறையா ? என்று கூறியுள்ளார். ஏற்கனவே தமிழக வீரர் நடராஜனுக்கு சப்போர்ட் செய்து பேசிய அவர் தற்போது அஸ்வினின் டெஸ்ட் இடம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அஸ்வினுக்கு அயல்நாட்டு போட்டிகளில் ஒரு சில போட்டிகளில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கூட அவர் சிறப்பாகவே செயல்பட்டாலும் ஏதாவது ஒரு சாக்கு வைத்து அவரை விளையாட வைக்காமலும் இந்திய அணி இருந்துள்ளது. இதனை குறித்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தையும், இனி அஸ்வின் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமாவது விளையாட வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.